தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரின் பொதுவாழ்வு பொன்விழாவையொட்டி அவரை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி பேசுகிறார். இதில் பா.ஜ.க.- அ.தி.மு.க. எதிர்ப்பாளர்கள் திரள்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் சரித்திரத்தில் எத்தனையோ மூத்த தலைவர்கள் மாநில தலைவர் பொறுப்பில் அமர்ந்தபோதும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டதில்லை. முதல்முறையாக இப்போதைய மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஜூலை 13-ம் தேதி தனது பிறந்ததினத்தை, அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பொதுவாழ்வு பொன்விழாவாக கொண்டாடுகிறார்.
இதற்காக ஜூலை 13-ம் தேதி காலையில் இருந்தே சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திருநாவுக்கரசரை வாழ்த்தும் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. மதியம் தொண்டர்களுக்கு அமர்க்களமான விருந்து காத்திருக்கிறது.
மாலை 5 மணிக்கு அதே காமராஜர் அரங்கில் திருநாவுக்கரசரை சர்வ கட்சித் தலைவர்களும் வாழ்த்தி பேசுகிறார்கள்.
இதற்கான அழைப்பிதழில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் முக்கியத்துவம் கொடுத்து அச்சிடப்பட்டுள்ளன. திருநாவுக்கரசரை அ.தி.மு.க. ஆதரவாளராக காங்கிரஸில் உள்ள சிலரே தொடர்ந்து விமர்சித்து வரும் வேளையில், ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தி பேச சம்மதித்ததை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் தி.மு.க. அணியில் உள்ள சிறு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.
காங்கிரஸ் தரப்பில் திக்விஜய்சிங், புதுவை முதல்வர் நாராயணசாமி, கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். உள்ளிட்ட தமிழக தலைவர்களும் பங்கேற்க இருப்பதாக அழைப்பிதழில் தெரிவித்துள்ளனர். முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ஆரூண் உள்ளிட்ட விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். பா.ஜ.க., அ.தி.மு.க.வின் அணிகள் மற்றும் இவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. எனவே இந்த விழாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி சென்னை மாநகர் முழுவதும் அரசரை வாழ்த்தி காங்கிரஸார் ‘பிளக்ஸ்’களை வைத்து அமர்களப்படுத்தியிருக்கிறார்கள்.