40 தமிழர்கள் இறந்தது ஒன்றுமில்லை என கூறிய மத்தியக் குழு மருத்துவரை உடனே நீக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு, திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை:
‘டெங்கு காய்ச்சலை ஒழிப்பது அரசின் கைகளில் இல்லை என்று தமிழகத்தில் டெங்கு பாதிப்பை பார்வையிட வந்திருக்கும் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் பேட்டியளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்பு என்ற அடிப்படை உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல், ஒரு மருத்துவர் இப்படி அறிவித்திருப்பது அகங்காரம் மிகுந்த ஒன்றாக இருக்கிறது.
மத்திய அரசு என்ன காரணத்திற்காக இந்தக் குழுவை மாநிலத்திற்கு அனுப்பியதோ அந்த நோக்கத்தை குழுவின் விசாரணை முடியும் முன்பே சிதறடிக்கும் முயற்சியாகவே மருத்துவரின் பேட்டி அமைந்துள்ளது. மத்திய குழுவினருடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் இந்தப் பேட்டி பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருப்பதில் இருந்து, தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான டெங்கு பாதிப்புகளை, மத்தியில் இருந்து வந்துள்ள குழு மட்டுமல்லாமல், இங்குள்ள ‘குதிரை பேர’ அரசும் கிள்ளுக்கீரையாகவே கருதுவது தெரிய வருகிறது.
‘எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது’ போல, அதே எய்ம்ஸ் மருத்துவர், “12 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 40 பேரின் மரணம் ஒன்றும் பெரிதல்ல” என்றும் கூறியிருப்பது, தமிழக மக்களின் உயிரைத் துச்சமாக நினைத்து, அவமதிக்கும் போக்காக இருக்கிறது. “40 தமிழர்கள் இறந்தது ஒன்றுமில்லை”, என்று மத்திய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் ஒருவர் எப்படி கருத்து தெரிவித்தார்? இப்படி கருத்துத் தெரிவிக்கும் துணிச்சலை அவருக்கு வழங்கியது யார்?
“40 பேர் இறந்தது ஒன்றும் பெரிதல்ல”, என்ற அந்த மருத்துவரின் கருத்தையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒப்புக்கொண்டு அமைதி காக்கிறாரா? தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, டெங்குவால் மரணமடைந்தோரை இழிவுபடுத்திப் பேசும் இது போன்ற பேட்டிகளை, அவர் எப்படி மறுக்காமல் இருக்கிறார்?
இது ஒருபுறமிருக்க, மத்திய குழுவில் உள்ள மருத்துவர், “40 பேர் இறந்ததாக”, தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக 256 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கோரியுள்ள மாநில அரசு, அந்த அறிக்கையில் 18 பேர் இறந்துள்ளதாக பொய்யான விவரங்களை கூறியிருப்பது மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது. விவசாயிகள் தற்கொலை, டெங்கு காய்ச்சலால் மரணம் என எல்லாவற்றிலும் ‘பொய் கணக்கு’ கூறுவதை ‘குதிரை பேர’ அரசு வழக்கமாக கொண்டிருப்பது கடும் கண்டத்திற்குரியது.
ஆகவே, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழகம் வந்துள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று பேட்டி கொடுப்பதை தவிர்த்து, உள்ளபடியே மாநில அரசுக்கு எந்தவிதமான உதவிகளை செய்தால், மாநில மக்களை டெங்கு பேரிடரிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக, மாநில அரசு கோரியிருக்கும் நிதியினை அளிப்பதற்கு ஏற்ற வகையில், தங்களுடைய பரிந்துரைகளை அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் துயரப்படும் போது அரசால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்வதென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கடமைதான் என்ன என்ற கேள்வி அடிப்படையாகவே எழுகிறது. ஆகவே, மக்களை பீதியடைய வைக்கும் வகையில் பேட்டியளித்த மருத்துவர் அஷ்தோஸ் பிஸ்வாஸை, மத்திய குழுவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மத்திய குழு டெங்குவை ஒழிக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆய்வினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.