Advertisment

வைகோ.வின் பழைய காயத்திற்கு மருந்திட்ட மு.க.ஸ்டாலின் : முரசொலி பவழவிழா மேடையில் முக்கியத்துவம்

முரசொலி பவழவிழா மேடையில் வைகோவுக்கு முக்கியத்துவம் அளித்து, அவரது பழைய காயத்திற்கு மருந்திட இருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
vaiko, m.k.stalin, vaiko at murasoli pavazha vizha

முரசொலி பவழவிழா மேடையில் வைகோவுக்கு முக்கியத்துவம் அளித்து, அவரது பழைய காயத்திற்கு மருந்திட இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

Advertisment

முரசொலி பவளவிழா, செப்டம்பர் 5-ம் தேதி சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த 10, 11-ம் தேதிகளில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விழாவின் தொடர்ச்சிதான் இது! ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் வாழ்த்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால் விழா தொடங்கிய சற்று நேரத்தில் பலத்த மழை கொட்டியதால், விழாவை இன்னொரு நாளில் நடத்துவதாக அறிவித்து ஒத்தி வைத்தார் ஸ்டாலின். அந்த விழாவைத்தான் செப்டம்பர் 5-ம் தேதி கொட்டிவாக்கத்தில் நடத்துகிறார்கள். இந்த முறை மழை வந்தாலும், கூட்டம் கலையாத அளவுக்கு கூரை அமைத்து விழாவுக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர்.

நந்தனம் கூட்டத்திற்கே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலமாக அழைத்தார் ஸ்டாலின். ஆனால் பழைய சில கசப்புகளை மனதில் வைத்திருந்த வைகோ, ‘விழாவுக்கு நான் வரவில்லை. ஆனால் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறேன்’ என கூறியிருந்தார். அதுபோலவே வாழ்த்துச் செய்தியும் அனுப்பியிருந்தார்.

vaiko met karunanidhi, murasoli pavazha vizha, m.k.stalin, vaiko கருணாநிதியை வைகோ சந்தித்தபோது...

ஆனால் அதன்பிறகு, காட்சிகள் மாறின. உடல் நலமின்றி ஓய்வில் இருக்கும் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்பது வைகோவின் ஆசை! ஆனால் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பார்க்கச் சென்ற வைகோவை, உடன்பிறப்புகள் கற்களை வீசி கலாட்டா செய்து திருப்பி அனுப்பினர். அந்த நிகழ்வு தொடர்பாக ஸ்டாலின் மீதே வைகோ குற்றம் சாட்டினார்.

எனவே மீண்டும் எப்படி கருணாநிதியை சந்திக்க அனுமதி கேட்பது என்கிற குடைச்சல்தான் அவரது மனதிற்குள் இருந்தது. இந்தச் சூழலில்தான் ஆர்.எஸ்.பாரதியின் அழைப்பு, அதை பாதி ஏற்றுக்கொண்டவராக வைகோ வாழ்த்துச் செய்தி அனுப்பியது, அதை முரசொலியில் வெளியிட்டு ஸ்டாலின் மகிழ்ந்தது ஆகியன இரு தரப்புக்கும் இடையே இறுக்கத்தை குறைத்தன. எனவே மீண்டும் கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் தரப்பிடம் வைகோ அனுமதி கேட்டார். இந்த முறை உடனே அனுமதியும் கிடைத்தது.

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை சந்தித்து உருகிய வைகோ, அங்கு ஸ்டாலின் கைகளையும் பிடித்தபடியே அமர்ந்திருந்தார். அப்போது, ‘செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் முரசொலி பவளவிழாவுக்கு நீங்கள் வரவேண்டும்’ என ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதை கருணாநிதிக்கு கேட்கும் வகையில் அவரிடமும் ஸ்டாலின் கூறினார். எப்போதுமே ஒரு சந்திப்பில் உருகிவிடும் தனது வழக்கமான பார்முலாப்படி, இதற்கு உடனே ஒப்புக்கொண்டார் வைகோ.

vaiko met karunanidhi, murasoli pavazha vizha, m.k.stalin, vaiko அருள்நிதி திருமண விழாவில் வைகோ

அதன்படி செப்டம்பர் 5-ம் தேதி கொட்டிவாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடக்கும் முரசொலி பவளவிழா மேடையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் வைகோ பங்கேற்கிறார். கடைசியாக கடந்த 2015 ஜூன் 8-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதியின் பேரன் அருள்நிதியின் திருமண விழாவில் வைகோ பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விழாவில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது, விழா மேடைக்கு வைகோ வந்தார். அப்போது ஸ்டாலின் பேச்சை நிறுத்தவில்லை. ‘தன்னை வீடு தேடி வந்து அழைத்த ஸ்டாலின், தனக்காக சில வினாடிகள் கூட பேச்சை நிறுத்தி உட்காரச் சொல்லவில்லையே’ என்பது வைகோவுக்கு ஏற்பட்ட முதல் ஆதங்கம்! அடுத்து, அரசியலில் சீனியரான வைகோ பேசியபிறகு, பாஜக மாநில தலைவர் தமிழிசையை பேச வைத்தனர்.

இந்த இரு அம்சங்களால் காயமான வைகோ, திமுக.வுடன் கூட்டணி சேர வைத்திருந்த திட்டத்தையே தூக்கி எறிந்தார். பிறகு மக்கள் நலக் கூட்டணி உதயமானதும், 2016 தேர்தலில் திமுக.வும், மக்கள் நலக்கூட்டணியும் தோற்றதும் தனிக்கதை!

அப்போது காயம்பட்ட வைகோவுக்கு மருந்திடும் வகையிலேயே செப்டம்பர் 5-ம் தேதி நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்டுள்ள அழைப்பிதழின்படி, மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். திமுக பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். ஸ்டாலின் நன்றி கூறுகிறார்.

வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில், திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணி, காங்கிரஸின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரின் பெயர்களுக்கு அடுத்தபடியாக வைகோவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக இடதுசாரி தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் மற்றும் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட திமுக.வின் வழக்கமான தோழமைத் தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இப்போது வரை பாஜக.வை கடுமையாகவே விமர்சித்து வருகிறார் வைகோ. எனவே திமுக.வுடன் இதேபோல ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க்-அவுட் ஆனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் வைகோ இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

Dmk M Karunanidhi Vaiko Murasoli Mdmk M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment