தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, முரசொலி பவள விழா ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். மொத்த தமிழகத்தையும் இந்த விழாவைப் பற்றி பேசவைக்கும் விதமாக இதற்கான திட்டமிடலை அவர் மேற்கொண்டார். இதற்காகவே விழாவின் முதல் நாளான ஆகஸ்ட் 10-ம் தேதி முக்கிய பத்திரிகை அதிபர்களையும், சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரையும் அழைத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
2-ம் நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 23 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சரியாக முரசொலி பவளவிழாவின் தொடக்கதினமான ஆகஸ்ட் 10-ம் தேதி அ.தி.மு.க.வில் அதிரடியான நிகழ்வுகள் அரங்கேறின. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி, ‘டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது’ என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதைத் தொடர்ந்து டி.டி.வி.யின் பேட்டி, எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேட்டிகள் என முதல் நாள் முழுக்க இது தொடர்பான செய்திகளும் விவாதங்களுமே மீடியாவை ஆக்கிரமித்தன. ஏராளமான திட்டமிடலுடன் பவளவிழாவை நடத்திய தி.மு.க. தரப்பு இதில் அப்செட்!
பவளவிழாவின் 2-வது நாளான ஆகஸ்ட் 11-ம் தேதியும் (இன்று) டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு, அதில் பங்கேற்க டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியே மீடியா அதிகம் விவாதித்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்தில் கூடும்படி தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முன்தினம் இரவு மு.க.ஸ்டாலினிடம் இருந்து அவசர செய்தி வந்தது.
அ.தி.மு.க. குழப்பங்களைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் இறங்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு தி.மு.க. முகாமில் நிலவுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மனநிலையை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களைவிட தி.மு.க. மாவட்டச் செயலாளர்களே வெகு நுட்பமாக மோப்பம் பிடித்து வைத்திருக்கிறார்கள். எனவே இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கலாம் என்பது அரசியல் வட்டார எதிர்பார்ப்பு!
தவிர, மாலையில் நடைபெறும் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வந்திருக்கும் தொண்டர்களின் எண்ணிக்கை, அவர்கள் தங்குவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், நிகழ்ச்சியில் அவர்கள் வந்து பங்கேற்கும் முறை குறித்தும் உரிய உத்தரவுகளை ஸ்டாலின் பிறப்பிக்கிறார்.