எட்டாத கனிக்கு கொட்டாவி விடுகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு முடிவு ஏற்படவேண்டும்’ என்றார்.
‘எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்களா?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘தேவைப்பட்டால் கொண்டு வருவோம்’ என்றார் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமி அரசு ஏற்கனவே நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஜெயித்து வருகிற 20-ம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. அதன்பிறகே தி.மு.க.வால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும்.
அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரனுக்கு கிடைக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மற்றும் ஆட்சியைக் கவிழ்க்க அவர் தயாராவதைப் பொறுத்தே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவரும் எனத் தெரிகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், ‘ஸ்டாலின் ஒருவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், அதுபற்றி அப்போது சிந்திப்போம்’ என்றார்.
இந்த சூழலில் ஸ்டாலின் கருத்து பற்றி இன்று தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு ஜெயகுமார், ‘எட்டாத கனிக்கு ஸ்டாலின் கொட்டாவி விடுகிறார். கறந்த பால் மடி புகாது. கருவாடு மீன் ஆகாது. ஸ்டாலின் எண்ணம் நிறைவேறாது!’ என குறிப்பிட்டார்.