கருணாநிதியை ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஜெயித்த 3 எம்.எல்.ஏ.க்கள் தேடிச் சென்று சந்தித்தார்கள். திமுக-வுடன் கைகோர்க்க அவர்கள் தயாராகிவிட்டதன் அறிகுறி இது!
கருணாநிதி, இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவர்! முதுமை காரணமாகவும், உடல்நலப் பிரச்னைகளாலும் வீட்டில் ஓய்வில் இருக்கும் கருணாநிதியை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். அதுவே அரசியல் வட்டாரங்களில் சலசலப்பைக் கிளப்பியது.
‘பல துண்டுகளாக நொறுங்கிய அதிமுக-வின் இமேஜ், நாளுக்கு நாள் சரிவதால் இனி கூட்டணிக்கு அதை நம்பிப் பயனில்லை. திமுக-வுடன் இணக்கத்தை பேணுவது நல்லது’ என்கிற முடிவுக்கு மோடி வந்துவிட்டதாக திமுக.வினரே சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்கின்றனர்.
இதற்கு முன்பு பலமுறை சென்னை வந்தபோது கருணாநிதியை சந்திக்காத மோடி, இப்போது சந்தித்த பின்னணிதான் அவர்களை அப்படி கருத வைக்கிறது. தவிர, இதற்கு முன்பு சென்னைக்கு வந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர்களும்கூட கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்காததை அவர்கள் நினைவூட்டுகிறார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘பாஜக விஷயத்தில் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்றார். மோடி சந்திப்புக்கு பிறகு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலினும், ‘மோடி-கருணாநிதி சந்திப்பில் அரசியல் இல்லை’ என்றார், உறுதியாக!
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக, தங்களின் ஆட்சியை தக்க வைக்க மத்திய அரசுடனும் பாஜக-வுடனும் எந்த சமரசத்திற்கும் தயாராக இருக்கிறது. ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நடத்தும் ஆய்வை பாஜக-வினரைவிட அமைச்சர்கள் விழுந்தடித்து வரவேற்கிறார்கள். ‘தமிழக ஆட்சியில் ஊழல் இருக்கிறது’ என பாஜக முக்கிய தலைவர்களே வைக்கும் விமர்சனங்களை அமைச்சர்கள் கண்டு கொள்வதே இல்லை.
விட்டால் இதையும், ‘டேக் இட் ஈஸி’ என்பார் திண்டுக்கல் சீனிவாசன். ‘இது ஆரோக்கியமான விமர்சனம்’ என்பார் செல்லூர் ராஜூ. எல்லாம் பதவி படுத்தும் பாடு!
ஆனால் அதிமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களான தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயகக் கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் அடுத்த தேர்தலுக்கு அதிமுக-வை நம்பி பிரயோஜனமில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர். சட்டமன்றத்தில் இவர்கள் மூவரும் ஸ்டாலினிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்ததில் இருந்தே இவர்களின் மனநிலை அதுதான்!
பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்யும் விவகாரத்திலும் ஸ்டாலினுடன் இவர்கள் இணைந்து இயங்கினர். ஆனாலும் இவர்கள் மூவரும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவர்கள் என்பதால், அதிமுக கொறடாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள்! எனவே அந்த சந்திப்புகள் குறித்து மரியாதை நிமித்தம், பொதுப்பிரச்னை என நாசூக்காக பேசி வருகிறார்கள்.
இதில் அடுத்த திருப்பம்தான், நேற்று (16-ம் தேதி) இரவு 8 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இவர்கள் சந்தித்தது! இதுவும் வழக்கம்போல மரியாதை நிமித்தமான, அரசியல் நாகரீகமான சந்திப்புதான் என்றாலும், இது உணர்த்தும் அரசியல் அதிகம்!
அதாவது, இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரும் பாஜக பிடியில் இருந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு தப்பும் வாய்ப்பே இல்லை. டி.டி.வி.தினகரன் தரப்பின் இமேஜும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே அடுத்த தேர்தலுக்கு திமுக-வை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைப்பாடுக்கு இவர்கள் வந்துவிட்டார்கள். ஒருவேளை டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் திமுக-வின் விருப்பத்தையே இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் நிறைவேற்றுவார்கள் என பேச்சு கிளம்பியிருக்கிறது.
நேற்று கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்த ‘இரட்டை இலை’ எம்.எல்.ஏ.க்கள் மூவரையும் ஸ்டாலின் மட்டுமல்ல, துரைமுருகன், எ.வ.வேலு என பெரும் திமுக படையே வரவேற்றது. அனைவருடனும் நின்று குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர் மும்மூர்த்திகள்!
இந்த சந்திப்பில் அதிமுக தரப்பைவிட அதிகமாக அதிர்ந்து கிடப்பவர்கள், திமுக கூட்டணியிலேயே உள்ள வேறு சில கட்சிகள்தான்! தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கும், பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கும் சமீப நாட்களாக நிர்வாகிகளை இழுப்பதில் செம ‘வார்’ நடக்கிறது. எனவே தமிமுன் அன்சாரி உள்ளே வந்தால், ஜவாஹிருல்லா அங்கே நீடிப்பது சிரமம். அதேபோல கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளே வந்தால், ஈஸ்வரன் அங்கு தொடர்வதில் பிரச்னை ஏற்படலாம். கருணாஸ் உள்ளே வந்தால், திமுக அணியுடன் உறவு பாராட்டும் ஓரிரு தேவர் அமைப்புகளுக்கு கதவு அடைக்கப்படும் வாய்ப்பு உண்டு.
ஆனாலும் இப்போதைக்கு எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் இவர்களை அலட்சியப்படுத்த திமுக விரும்பவில்லை!