தமிழக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்தால் ஆங்காங்கே பிரமாண்டமான ஆர்ச், அதன் உள்ளே பளிச்சென பெரியார் சிலை எனப் பார்க்க முடியும். இந்த அடையாளம் கொண்டவை சமத்துவபுரங்கள்தான்! அதிகாரபூர்வ பெயர், பெரியார் நினைவு சமத்துவபுரம்!
தமிழகம் முழுக்க மொத்தம் இப்படி 240 சமத்துவபுரங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் திமுக.வின் முந்தையை இரு ஆட்சிகளில் அமைக்கப்பட்டவை! கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக எத்தனையோ சமூகத் திட்டங்களை கொடுத்திருந்தாலும், அவற்றில் முத்தாய்ப்பான ஒரு திட்டம் இது! அவரது ‘பெட் புராஜக்ட்’ என்றும் கூறலாம்.
இந்தியாவில் அல்ல... உலகில் எங்கும் யாரும் சமத்துவத்திற்காக சிந்திக்காத ஒரு திட்டம் இது என்றாலும் அது மிகையில்லை. பெருநகரங்களை ஒட்டிய கிராமப் பகுதியில் அரசு சார்பிலேயே சுமார் 8 முதல் 10 ஏக்கர் நிலம் வரை ஒதுக்கீடு செய்து, அதில் 100 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து தங்க வைத்த திட்டம்!
அனைத்து சமூகங்களையும் சார்ந்தவர்களாக அந்த ஏழைகள் இருந்தார்கள் என்பதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். அதாவது, மொத்தமுள்ள 100 பயனாளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 40 வீடுகள், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 25 வீடுகள், பிற்பட்ட வகுப்பினருக்கு 25 வீடுகள், இதர வகுப்பினருக்கு 10 வீடுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவர்கள் அனைவருக்கும் பொதுவான சமூக நலக்கூடம், பொது குடிநீர்க் குழாய்கள், பொதுவான நூலகம், பொதுவான மயானம் என அனைத்தும் அரசு செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டன. 2007-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெயர் சூட்டுவதில் எழுந்த மோதல்கள், அதைத் தொடர்ந்து நடந்த சாதிக் கலவரங்களையொட்டி சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் ஒரு முனைப்பில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுமார் 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று அந்த சமத்துவபுரங்கள் எப்படி இருக்கின்றன? நிஜமாகவே சமத்துவத் தென்றல் அங்கு வீசுகிறதா? அரசும், அதிகாரிகளும் இன்னும் கொஞ்சமாவது அந்தத் திட்டத்தை நினைவில் வைத்திருக்கிறார்களா? என அறிந்துகொள்ள விரும்பினோம்.
சாம்பிளுக்கு நாம் விசிட் அடித்த இடம், திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூரில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம். திருநெல்வேலி- தென்காசி சாலையில் சரியாக திருநெல்வேலியில் இருந்து 15-வது கிலோ மீட்டரில் இந்த சமத்துவபுரம் இருக்கிறது.
முகப்பில் இருந்த பெரியார் சிலையைக் கடந்து உள்ளே சென்றால், இடதுபுறம் நூலகக் கட்டிடமும், வலதுபுறம் சமூக நலக் கூடமும் தென்பட்டன. இரண்டுமே பூட்டிக் கிடந்தன. சமத்துவபுரம்வாசியான குமார் நம்மிடம் கூறுகையில், ‘2001-ல் திமுக ஆட்சி நிறைவு பெறும் தருணத்தில் இந்த சமத்துவபுரம் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இந்த நூலகத்திற்கு நூலகரும் கிடையாது. அங்கு புத்தகங்களோ, பத்திரிகைகளோ வாங்கப்படுவதும் இல்லை.
நெல் அறுவடை காலங்களில் வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் அரசு சார்பில் கொள்முதல் செய்யும் நெல் மூடைகளை இருப்பு வைப்பதற்கு குடோன்களாக இந்த நூலகத்தையும், சமூக நலக் கூடத்தையும் பயன்படுத்துகிறார்கள். சமூக நலக் கூடத்தைப் பொறுத்தவரை, அறுவடை இல்லாத காலங்களில் மக்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பயன்படவே செய்கிறது.
நூலகத்திற்கு இந்த சமத்துவபுரத்தை சேர்ந்த ஒருவரையே பொறுப்பாளராக நியமித்து, பத்திரிகைகள் போட நடவடிக்கை எடுத்தால் இங்குள்ள அனைத்து சமுதாயத்தினரும் தினமும் கூடும் இடமாக அது அமையும்’ என்று கூறிய குமார், அதிமுக.வில் மாவட்டப் பிரதிநிதியாக இருக்கிறார்.
அவரே தொடர்ந்து, ‘இங்கு வசிக்கும் மக்களுக்கு சரியான தொழில் வாய்ப்புகள் இல்லை. கட்டட வேலைக்கு அல்லது கூலி வேலைகளுக்கு செல்கிறவர்கள் பஸ் ஏறி, 15 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்வேலிக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. விரைவு பஸ்களும் இங்கு நிற்காமல் சென்றன. நான் அதிமுக.வில் பொறுப்பில் இருப்பதால், மாவட்டச் செயலாளர் மூலமாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இங்கு விரைவு பஸ்கள் நிற்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். எனினும் இன்னும் வேறு பல குறைகள் இருக்கவே செய்கின்றன’ என்கிறார் குமார்.
குடோனாக பயன்படும் சமத்துவபுரம் நூலகம்
‘2001-ல் அமைக்கப்பட்ட இந்த சமத்துவபுரத்தில், அதன்பிறகு இதுவரை தெரு சாலைகள் செப்பனிடப்படவே இல்லை. வடிகால் வசதிகள் செய்யப்படவில்லை. 2006 திமுக ஆட்சிகாலத்தில் ஒருமுறை வீடுகளின் கூரைகளை அரசு சார்பில் செப்பனிட்டுக் கொடுத்தார்கள். அதன்பிறகு அதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை. நான் அதிமுக காரனாக இருந்தாலும் உண்மையை சொல்லித்தானே ஆகணும்?!’ என எதார்த்த நிலவரங்களை பட்டியலிட்டார் குமார்.
வாரத்தில் இருநாள் ரேஷன் கடையும், பால்வாடி மையமும் குறை சொல்ல முடியாத அளவில் இங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன. குடிநீர் பிரச்னையும் பெரிதாக இல்லை. சீதபற்பநல்லூர் கிராமத்தில் இருந்தும் அரை கி.மீ தொலைவில் சற்றே காட்டுப் பகுதியில் இந்த சமத்துவபுரம் இருப்பதால், இரவு 7 மணிக்குப் பிறகு பாதுகாப்புப் பிரச்னைகள் இருக்கின்றன. எனவே ஒரு போலீஸ் அவுட் போஸ்ட் இங்கு அமைக்கலாம் என்கிறார்கள் சமத்துவபுரம்வாசிகள் சிலர். சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் நூலகம், சமூக நலக்கூடம் ஆகியவற்றின் ஜன்னல் கதவுகள்கூட பிய்த்து எடுக்கப்பட்டிருக்கின்றன.
‘சமத்துவபுரத்தில் யார் ஒருவர் வீட்டில் நல்ல விசேஷமோ, கெட்ட விசேஷமோ, சாதி பார்க்காமல் அனைவரும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். அந்த வகையில் சமத்துவபுரத்தின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது’ என்கிறார் குமார், மகிழ்வுடன்!
சமத்துவபுரத்தின் அடுத்தடுத்த தெருக்களை சுற்றிப் பார்த்தோம். ஒரே சாதிக்காரர்கள் அருகருகே இல்லாத அளவுக்கே வீடுகளை அரசு ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு 2-ம் எண் வீடு ஆதி திராவிடருக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் 3-ம் எண் பிற்பட்ட வகுப்பினருக்கோ, இதர வகுப்பினருக்கோ வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒதுக்கப்பட்ட இடம், தலா 5 செண்ட்! பலரும் அவரவர் வசதிக்கேற்ப சொந்தக் காசைப் போட்டு வீடுகளை பெரியதும் சின்னதுமாக மாற்றியிருக்கிறார்கள். இங்கேயே குறைந்தபட்சம் ஒரு தொடக்கப்பள்ளி தேவை என்பது சமத்துவபுரம் வாசிகளின் கோரிக்கையாக இருக்கிறது. கூட்டுறவு அமைப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக ஏதாவது தொழில் வாய்ப்புகளை இங்கு உருவாக்கிக் கொடுத்தாலும் உபயோகமாக இருக்கும்.
கிளம்புகிற நேரத்தில் சமத்துவபுரம்வாசி ஒருவர் கூறிய தகவல் சற்றே அதிர்ச்சிகரமானது. ‘முன்னேறிய வகுப்பு ஏழைகள் 5 பேரும் இந்த சமத்துவபுரத்தில் வீடு பெற்றிருந்தார்கள். அவர்கள் அனைவருமே வீடுகளை விற்றுவிட்டு, ஏற்கனவே இருந்த இடங்களுக்கே போய்விட்டார்கள். அதேபோல வேறு சிலரும் இங்குள்ள தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு இடங்களில் வசிக்கிறார்கள்.
சமத்துவபுரத்தில் வீடு பெறுகிறவர்கள், 30 ஆண்டுகளுக்கு அதனை விற்கக்கூடாது. அப்படி விற்கும்பட்சத்தில் அரசு அந்த ஒதுக்கீடை ரத்து செய்ய முடியும். இதற்கான விதி, சமத்துவபுரத்திற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையிலேயே இருக்கிறது. அதேபோல குடியிருப்பதை தவிர, வேறு வர்த்தக உபயோகங்களுக்கு இந்த வீடுகளை பயன்படுத்தக் கூடாது. எனவே சிலர் வாடகைக்கு வீடுகளை விட்டுக் கொடுத்திருப்பதும் சட்ட மீறல்தான். அதிகாரிகள் அவ்வப்போது இங்கு விசிட் செய்து இதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தால், இந்த சமத்துவபுரத்தின் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறும்’ என்றார்.
இந்த சமத்துவபுரத்தின் நிறைகுறைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். அவர் உரிய நடவடிக்கைகள் எடுத்தால், ஐஇ தமிழில் அது குறித்து தெரிவிக்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.