scorecardresearch

நவ. 1-ல் கொள்ளுப் பேரன் மண விழாவில் கருணாநிதி : அழகிரி – ஸ்டாலினை இணைக்க ஏற்பாடு

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதில் அழகிரி-ஸ்டாலின் இணைப்புக்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது.

m.karunanidhi, dmk, mk stalin, mk azhagiri, actor vikram

நவம்பர் 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதில் அழகிரி-ஸ்டாலின் இணைப்புக்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழிப் பேரன் மனு ரஞ்சித். இவர், கவின்கேர் குழும நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் ஆவார். இவருக்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் கடந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டார். நடிகர் விக்ரம் அழைப்பின் பேரில் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டைக் கடந்த நிலையில், கருணாநிதி தலைமையில் திருமணத்தை நடத்த மணமக்கள் காத்திருந்தனர். சமீப நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 19-ம் தேதி கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்திற்கு வந்து, முரசொலி பவள விழா கண்காட்சியை சுமார் 45 நிமிடங்கள் கண்டு களித்தார்.

ஏற்கனவே டிரக்கியோஸ்டமி முறையில் தொண்டையில் துளையிட்டு அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரால் பேச முடியவில்லை. விரைவில் அந்தக் குழாயை அகற்றிவிட்டு, கருணாநிதிக்கு பேச பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

இப்படி கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதால், இந்தத் தருணத்தில் மனு ரஞ்சித்-அக்ஷிதா திருமணத்தை நடத்த மண வீட்டார் முடிவு செய்தனர். அதன்படி நவம்பர் 1-ம் தேதி இந்தத் திருமண விழா நடைபெற இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி இதில் கலந்து கொள்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு திருமண விழாவில் கருணாநிதி பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்தில் இந்த விழாவை நடத்துவதா? அல்லது கருணாநிதியின் மகள் செல்வியின் இல்லத்தில் நடத்துவதா? என பரிசீலனை நடப்பதாக தெரிகிறது. கருணாநிதியின் வசதி, விருந்தினர்களின் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதில் இறுதி முடிவு செய்யப்படும்.

கருணாநிதியின் குடும்பத்தில் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கும் நிலையில், அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக அழகிரி மட்டும் தனித்து நிற்பது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கருணாநிதி உடல்நலம் தேறி வரும் இந்தச் சூழலில் அழகிரியையும், ஸ்டாலினையும் அவர் கண் எதிரே இந்த விழாவில் கைகோர்க்க வைத்து கருணாநிதியை சந்தோஷப்படுத்தும் திட்டத்தை அவரது குடும்பத்தினர் முன்னெடுத்து வருகிறார்கள்.

சமீப காலமாக அரசியலை விட்டு முற்றிலும் ஒதுங்கிவிட்ட அழகிரி, சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேசுவதும் இல்லை. எனவே ஸ்டாலினுக்கும் இப்போது அழகிரி மீது விரோதம் இல்லை. எனவே இருவரையும் இணைக்க இதுதான் தருணம் என கருதும் உறவினர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். எனினும் அரசியலில் அழகிரிக்கு இடமில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறுகின்றனர்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: M karunanidhi presides his great grandson marriage plan to bring mk stalin and azhagiri together