Ma.Subramanian DMK: அரசியலையும் தாண்டி சிறந்த தடகள வீரராக அசத்தி வருகிறார் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன். 12 நாடுகள், 111 மாரத்தான் போட்டிகள் என இளைய தலைமுறையினருக்கே சவால் விடுகிறார் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன்.
திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் அரசியல் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், உடற்பயிற்சி, ஃபிட்னெஸ் போன்ற விஷயங்களிலும் சிறந்து விளங்குபவர். தற்போது உடற்பயிற்சியில் புதிய சாதனையைப் படைத்து, ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் வழக்கம் போல் பார்க்கில் நடை மற்றும் ஓட்ட பயிற்சி மேற்கொள்ள முடியாது என்பதால், தனது வீட்டின் மொட்டை மாடியில் 8 வடிவ ஓடு தளத்தை அமைத்து, இடைவிடாமல் 4 மணி நேரம் 8 நிமிடம், 18 விநாடி, 1010 முறை ஓடி சாதனைப் படைத்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் திமுக-வின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் படு பிஸியாக களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மா.சுப்பிரமணியன், சத்தமில்லாமல் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியதற்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு பேசத் தொடங்கினோம்.
“கடந்த 20 வருஷமாவே நடைப்பயிற்சி என்னோட அன்றாட வாழ்க்கையில் ஒண்ணா இருக்கு. 2004 அக்டோபர்ல எனக்கு ஒரு பெரிய விபத்து நடந்துச்சு. இதனால என்னோட வலது கால் 6 துண்டா உடைஞ்சு 6 மாசம் ஆஸ்பத்திரிலயும் வீட்லயும் ஓய்வுல இருந்தேன். தலைலயும் பலத்த காயம், உயிருக்கு போராடுற நிலைமை. அதுக்கு அப்றம் நீங்க இனி வேகமா நடக்க முடியாது, தரையில சம்மணம் போட்டு உக்கார முடியாதுன்னு டாக்டர்ஸ் எல்லாரும் சொன்னாங்க. அதுக்கு அப்புறம் யோகா பிராக்டீஸ் பண்ணி ஓட ஆரம்பிச்சேன். 2013 கடைசில ஓட ஆரம்பிச்சு, 2014 பிப்ரவரில பாண்டிச்சேரில நடந்த ஒரு மாரத்தான்ல 21 கி.மீ ஓடுனேன். அது தான் என்னோட முதல் மாரத்தான். 2014 - 2015-ல 25 மாரத்தான் ஓடி ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல வந்தேன். அடுத்த 6 மாசத்துல ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல வந்தேன். 3 வருஷத்துல 50, 4 வருஷத்துல 75, 5 வருஷத்துல 100-ன்னு இப்போ மொத்தம் 112 மாரத்தான் ஓடியிருக்கேன். இது 111 மாரத்தான் 21 கி.மீ, ஒண்ணு மட்டும் 42 கி.மீ” என நம்மை ஆச்சர்யமடையச் செய்தார்.
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அதிக நேரம் அதாவது 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள்(22.2 ft✖️15.5 ft) எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடைநில்லாமல் (Non stop running) ஓடி,அது நேற்றைக்கு ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு 'ASIA BOOK OF RECORDS'ல் இடம் பெற்றுள்ளதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன்.... pic.twitter.com/DAymFlCi5w
— Subramanian.Ma (@Subramanian_ma) June 19, 2020
இந்த சாதனை எப்படி சாத்தியமானது என்றதற்கு, “லண்டன், இத்தாலி, ஆஸ்திரேலியா, கத்தார், நார்வேன்னு 12 வெளிநாடுகள்ல ஓடியிருக்கேன். இந்தியாவில் லடாக் உட்பட மொத்தம் 37 மாநிலங்கள் இருக்கு. அதுல 20 மாநிலங்கள்ல என்னோட 21 கி.மீ ஓட்டத்த முடிச்சிருக்கேன். மீதி இருக்கும் மாநிலங்கள்லயும் ஓடுறது தான் என்னோட அடுத்த இலக்கு. கொரோனாவுக்கு அப்புறம் எல்லாம் சரியாகி, இயற்கை இடம் கொடுத்தா, இந்தியா முழுக்க ஓடலாம்ன்னு இருக்கேன்.
மார்ச் 17-ம் தேதில இருந்து, 3 மாசமா நமக்கு பார்க், பிளே கிரவுண்டுன்னு எல்லாத்தையும் மூடிட்டாங்க. ஸோ, மார்ச் 18-ம் தேதியே வீட்டு மாடில நான் ஒரு ’8’ போட்டுட்டேன். பொதுவா எல்லாரும் 8-ல நடப்பாங்க, நான் 1 மணி நேரம், ஒன்றரை மணி நேரம், ரெண்டு மணி நேரம்ன்னு ஓட ஆரம்பிச்சேன். இப்போ 3 மாசமா ஓடிட்டு இருக்கேன். ஒரு 10 நாள் முன்னாடி காலைல மென் தூறலா மழை பேஞ்சது. மாடிக்கு வந்து பாத்தா தூறலோட வானிலை நல்லா இருந்துச்சு. ஏற்கனவே நெறைய மாரத்தான்ல மழைல நனைஞ்சிக்கிட்டே ஓடிருக்கேன். ஃபிலிபைன்ஸ்ல நடந்த ஒரு மாரத்தான் முழுக்கவும் மழைல ஓடியிருக்கேன். கோவாவுல மழைலயே மாரத்தான் நடத்துனாங்க. ரோட்ல தண்ணி பெருக்கெடுத்து ஓடுச்சு, அப்போவும் ஓடுனோம்.
மழை பிடிக்கும்ங்கறனால அதுல ஓடவும் பிடிக்கும். ஸோ மழை எப்போ நிக்குதோ அதுவரைக்கும் ஓடுவோம்ன்னு முடிவு பண்ணி, காலைல 5.20-க்கு ஆரம்பிச்சு, 8.30 வரைக்கும் 3 மணி நேரம் 10 நிமிஷம் ஓடுனேன். அந்த வெதர்ல அது நல்லா இருந்தது. நார்மல் ஓடுதளத்துல ஓடுறது ஈஸி, ஏற்கனவே 4, 5 மணிநேரம் ஓடியிருக்கேன். ஆனா 8 வடிவ தளத்துல கண்ணு சுத்தும். மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். இதுலயே ஓடிட்டோமேங்குற தைரியத்துல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணுங்கற நோக்கத்துல காலைல 4 மணிக்கு ஆரம்பிச்சு 700, 800 சுற்று ஓடலாம்ன்னு நினைச்சேன். பட் 1010 சுற்று ஓட முடிஞ்சது. இதை 4 மணி நேரம் 8 நிமிஷம் 18 விநாடில ஓடி முடிச்சிருக்கேன். இதை ‘ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அப்ரூவ் பண்ணி இந்த வருஷ சாதனைல சேத்துருக்காங்க” என்றார் கூலாக.
ஃபிட்னெஸில் பலருக்கும் நீங்கள் இன்ஸிபிரேஷனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் இன்ஸிபிரேஷன்? என்ற கேள்வியை முன் வைத்தோம்.
”கலைஞர், தளபதி தான். திமுக தலைவரோட 15, 20 வருஷமா வாக்கிங் போறேன். இப்போ இந்த கொரோனா நேரத்துல தான் அது தடைப்பட்டிருக்கு. கலைஞர் தன்னோட கடைசி காலம் வரைக்கும் யோகா, மூச்சுப் பயிற்சி எல்லாம் செஞ்சிட்டு இருந்தாரு. அவங்க உடல் மேல வச்சிருந்த அக்கரை நமக்கும் உந்துதல ஏற்படுத்துச்சு.”
இன்னும் கூட நிறைய இளைஞர்கள் உடல்நலத்தில் அக்கரை இல்லாமல் இருக்கிறார்களே?
”கட்டாயம் எல்லாரும் உடற்பயிற்சி பண்ணனும். ஏன்னா இன்னைக்கு கொரோனா நமக்கு பெரிய பாடத்த சொல்லிக் கொடுத்திருக்கு. ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழையையும், பல்லாயிரம் கோடி சொத்து வச்சிருக்க பணக்காரனையும் ரோட்டுக்கு வர முடியாத நிலைமைல நிறுத்தியிருக்கு. இதனால உடல் மட்டும் தான் நம்மளோட மிகப்பெரிய சொத்துங்கரத உணர்ந்து எல்லாரும் உடற்பயிற்சில ஈடுபடணும். நேரம் இல்லன்னு சொல்றதுங்கறதுலாம் பெரிய பொய். 24 மணி நேரமும் பிஸியா இருக்கேங்கறத விட பொய் வேற எதுவுமே இல்ல. அதனால நிச்சயம் எல்லாரும் காலைல உடற்பயிற்சி பண்ணணும்.”
உங்களின் உடற்பயிற்சி நேரத்தை எவ்வாறு வகுத்துக் கொள்கிறீர்கள் என்றதற்கு,
"நான் காலைல 5 மணிக்கு மேல தூங்கி ஒரு 25 வருஷம் இருக்கும். எந்த வெளிநாட்டுல, வெளி மாநிலத்துல, வெளியூர்ல இருந்தாலும் 5 மணிக்கு எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவேன். ஒருவேளை அதிகாலைல வெளியூர்களுக்கு போறதா இருந்தா செங்கல்பட்டு / பூந்தமல்லி தாண்டினதும் வண்டிய விட்டு இறங்கி 10 கி.மீ ஓடிடுவேன், வண்டி பின்னாடியே வரும். அப்புறம் ரோடு ஓரத்துல கிணறு, பம்புசெட் இருந்தா அங்கேயே குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்குவேன். அப்படி எதும் இல்லன்னா, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல போய் ஃப்ரெஷ் ஆகிடுவேன். நான் டயாபடிக் பேஷண்ட். தொடர் உடற்பயிற்சி தான் என்ன கண்ட்ரோலா வச்சிருக்கு."
ரகசிய உணவு என ஏதாவது இருக்கிறதா?
”உணவு எதையுமே ஒதுக்காமல் நல்லா சாப்பிடுவேன். திருப்பதியில் ஓடும்போது, அந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது உணவின் ரகசியம் என்னன்னு கேட்டாங்க. நல்லா சாப்பிடணும், நல்லா ஓடணும்ன்னு சொல்லிட்டு, சாப்பிடுறதுக்காகத் தான் ஓடுறேன்னு சொன்னேன். அதனால சாப்பாட்டுல எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல. மீன் எனக்கு ரொம்பப் பிடிச்ச உணவு.”
மறக்க முடியாத நிகழ்வு?
”ஒவ்வொரு ஊர்ல ஓடும் போதும், நீங்க தான் இன்ஸ்பிரேஷன்னு ஒரு 10 பேராச்சும் சொல்லுவாங்க. ஒருமுறை புனேவில் பவ்தான் மலையில் கிறிஸ்துமஸ் மாரத்தானில் கலந்துக் கொண்டிருந்தேன். அப்போ என்ன மாதிரியே ஒரு பெரியவரும் ஓடிட்டு இருந்தாரு. அவருக்கிட்ட பேச்சுக் கொடுத்தப்போ, மும்பைல இருந்து வந்துருக்கறதாகவும், ஒன்றரை வருஷத்துல 60 வயசாகப் போகுதுன்னு சொன்னாரு. உங்களுக்கு என்ன லட்சியம்ன்னு அவர் கிட்ட கேட்டேன். இதுவரைக்கும் 48 மாரத்தான் ஓடியிருக்கேன். 10 வருஷமா ஓடிட்டு இருக்கேன். 60 வயசுல 60 மாரத்தான் முடிக்கணுன்னு சொன்னாரு. ஏன் இந்த இலக்குன்னு கேட்டேன், சென்னைல சுப்பிரமணியன்னு ஒருத்தர் 5 வருஷத்துல 100 மாரத்தான் ஓடியிருக்காரு. அவர் தான் இன்ஸிபிரேஷன்னு சொன்னாரு. அப்புறம் நான் தான் அந்த சுப்பிரமணின்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். பிறகு 2,3 மாரத்தான்ல அவர பாத்தேன். மொழி கடந்து மானசீகமா அவர் என்ன நினைச்சிருந்தது, எனக்கு ஊக்கமா இருந்துச்சு.”
எளிமையான ஒரு டிப்ஸ்...
”மூச்சுப் பயிற்சி தான். ஏன்னா இதுக்கு தனியா எந்த இடமும் தேவைப்படாது. கார்ல போகும் போது, சும்மா உக்காந்துருக்கும் போதும் இதை செய்யலாம்.”
பிரச்சாரம் போன்ற பிஸியான நேரங்களில் உடற்பயிற்சி தடைபடுமே...
”நிச்சயமாக இல்லை. எங்கே என்ன வேலையாக இருந்தாலும், காலை நாலரை, அஞ்சு மணிக்கு எந்த வேலையும் இருக்காது. அதனால ஒண்ணும் பிரச்னை இல்ல. போன எலெக்ஷன்ல தூத்துக்குடில 1 மாசம் இருந்தேன், வழக்கம் போல உடற்பயிற்சி, ஓட்டம் எல்லாமே டே டுடே லைஃப்ல இருந்தது. காலைல 5 மணில இருந்து 8 மணி வரைக்கும் எங்கேயாச்சும் நான் ஓடிட்டு இருப்பேன். இப்போ இந்த கொரோனா காலத்துல சாயங்காலமும் ஓடுறேன். ஃபோன் பேசுற நேரத்த இந்த 3 மாசமா, 8-ல நடந்துட்டே பண்ணிட்டே இருக்கேன்.”
இன்று காலை நான் பார்த்த திரைப்படத்தின் "கிளைமாக்ஸ்" காட்சியில் கதாநாயன் சொன்ன இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...
"SUCCESS IS NOT A DESTINATION....
SUCCESS IS A JOURNEY. pic.twitter.com/hjUYpHya59
— Subramanian.Ma (@Subramanian_ma) June 18, 2020
சமீபத்தில் பார்த்த படம்?
”தெலுங்கில ‘மஹார்ஷி’ன்னு மகேஷ் பாபுவோட படம். அந்த க்ளைமேக்ஸ்ல அவர் சொன்ன "SUCCESS IS NOT A DESTINATION, SUCCESS IS A JOURNEY”ன்னு அவர் சொன்னது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. இப்போ ‘பென்குயின்’ ஒண்ணே கால் மணி நேரம் பாத்துட்டேன். மீதியை இன்னைக்குள்ள பாத்திடுவேன்”.
புத்தகங்கள்?
”நிறைய படிக்கிறேன். ‘ஓடலாம் வாங்க’ன்னு புத்தகம் ஒண்ணு எழுதி முடிச்சு, கடைசி கரெக்ஷனுக்குக் கொடுத்திருக்கேன். அதை ஆங்கிலத்துல ட்ரான்ஸ்லேட் பண்ணி, ரெண்டையும் ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன். அதுல இந்த ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸையும் சேர்க்கணும். என்னோட 112 மாரத்தான் அனுபவத்தையும் அதுல சொல்லிருக்கேன். 49-வது மாரத்தான்ல டெண்டுல்கர் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாரு. ஆச்சர்யப்பட்டு பேசி, அவர் மனைவி அஞ்சலிக்கு என்னை அறிமுகப்படுத்தினாரு. அது எல்லாத்தையும் இந்த புக்ல சொல்லிருக்கேன். நான் இது வரைக்கும் 40 நாடுகளுக்கு போயிருக்கேன். அதை மையமா வச்சு, ‘நான் கண்ட நாடுகள் 40’ங்கற புத்தகத்த அடுத்ததா எழுதுறேன். இப்போ பாஸ்போர்ட்ட எடுத்து பாத்து, தேதி குறிப்பு எடுத்துட்டு இருக்கேன்!”
படங்கள் - மா.சுப்பிரமணியன் முகநூல் பக்கம்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இ
ணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.