மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடியை அரசாங்கம் கட்டுப்படுத்தவேண்டும் – ஆவேசத்தில் மாதர் சங்கம்

பொதுமுடக்க காலத்திற்கு முன்பு, மாதம் ஐயாயிரம் சம்பாதிக்கும் குடும்பங்கள் 20% ஆகா இருந்தது, ஆனால் கொரோனா காலத்தில் 42% உயர்ந்துவிட்டது.

சுகந்தி, மாநில பொதுச்செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

2020இல் இருந்து கொரோனா பெரும் தொற்று உலகெங்கும் வாழும் மக்களின் வாழ்வை புரட்டிபோட்டதை எல்லோரும் அறிவோம். அதேபோல தமிழகத்திலும் தொழில் பாதிப்பு, வேலை இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தை தாண்டியும் இன்று வரை ஏழை எளியோர் தங்கள் குடும்பத்தை நடத்துவதே மிகப் பெரிய சவாலாக பார்க்கின்றனர். எனவே கொரோனா காலத்திற்கு முன்பும், கொரோனா காலத்திற்கு பின்பும் பெண்கள் வாங்கிய கடன்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வை இந்திய முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்தியுள்ளது.

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 1073 பெண்களிடம் ஆய்வு செய்ததில் வெளிவந்த தகவல்களைக் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி கூறுவது:

“தற்போது இருக்கும் அரசாங்கம் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்காமல், ஒட்டுமொத்த பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது வேதனையளிக்கிறது. நாங்கள் நடத்திய ஆய்வில் எழுபது சதவீத மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதை அறிந்துகொண்டோம்; இதில் தனித்து வாழும் பெண்களின் (கணவனை இழந்தவர்கள், திருமணம் ஆகாதவர்கள், கணவனிடமிருந்து பிரிந்தவர்கள்) எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

பொதுமுடக்க காலத்திற்கு முன்பு, மாதம் ஐயாயிரம் சம்பாதிக்கும் குடும்பங்கள் 20% ஆகா இருந்தது, ஆனால் கொரோனா காலத்தில் 42% உயர்ந்துவிட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக (வீட்டு செலவுகள், மருத்துவ செலவு, திருமணம், தொழில் நஷ்டம், ஈமச்சடங்கு, கல்விச்செலவு, கடனுக்கு வட்டி, வீடு வாடகை, குழு கடன்கள்) போன்ற பல தேவைகளுக்காக கடன் பெற்றுள்ளனர். வருமானம் இல்லாத காரணத்தினால் பல திருமணங்கள் இந்த கொரோனா நேரத்தில் தடைப்பட்டுள்ளது. நிலம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பென்ஷன் புத்தகம், நகை போன்றவற்றை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். சிலர் தங்களிடம் இருந்த நகைகளை விற்று கடனை அடைத்துள்ளனர். 

பெரும்பாலும் நுண் நிதி நிறுவனங்கள், அரசு வங்கிகள், தனியார் வட்டிக்காரர்கள், கந்துவட்டிக்காரர்கள் மூலம் கடன் பெற்றுள்ளனர். கடனை கட்ட முடியவில்லை என்றால் பல இடங்களில் நுண் நிதி வசூல்தாரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். அவமானம் தாங்காமல் மக்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனாவிற்கு முன்பு பெற்றதைவிட கொரோனாவிற்கு பிந்தைய களங்களில் பெற்றுள்ள கடன்களே அதிகமாகும். இப்படிப்பட்ட நெருக்கடிக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி வசூலை நிறுத்தவேண்டும், கடனை கட்டுவதற்கு சகஜ நிலை திரும்பும் வரை காலக்கெடு கொடுத்து அந்த காலத்தில் கடனுக்கு வட்டி வசூல் செய்யக்கூடாது என்று மனுதாக்கல் செய்தது. 

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவை ஆறு மாத காலம் கடனை கட்டுவதற்கான அவகாசமும், அந்த குறிப்பிட்ட காலத்தில் வட்டி வசூல் செய்யக்கூடாது என்றும் உத்தரவை பிறப்பித்தது. அக்காலத்தில் தமிழக அரசும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் நுண் நிதி நிறுவனங்கள் இடைவிடாமல் கடனை வசூல் செய்ததோடு மட்டுமல்லாமல் கடனுக்கான வட்டியையும், வட்டிக்கு வட்டி போட்டும் வசூல் செய்தும் வருகிறது. இந்த நடவடிக்கைகள் பெண்களை மேலும் இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. குறிப்பாக தனித்து வாழும் பெண்கள், விதவைப்பெண்கள் ஆகிய பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

வங்கிகளிலிருந்து சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்கள் 6 – 7% வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள், அதை எளிய மக்களுக்கு 27% வட்டிக்கு கடனாக வழங்குகிறார்கள்; இதனால் 18-20% வட்டி நுண் நிதி நிறுவனங்களுக்கு லாபமாக வருகிறது, ஆனால் மக்கள் இந்த வணிக சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

ஆகையால் நுண் நிதி நிறுவனங்கள் அடாவடியாக கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்தவும், ஊரடங்கு காலத்தில் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவும், முழுமையான வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை கடனை திருப்புவதற்கு கால அவகாசம் வழங்கவும், நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகளை மாவட்டம்தோறும் நியமிக்கவும், கட்டாய வசூல் செய்து பெண்களை மிகுந்த மனா உளைச்சலுக்கு உலாக்கி தற்கொலைக்குத் தள்ளும் நுண்நிதி நிறுவனங்கள்  கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசாங்கம் உத்தரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”

மேலும், “இந்த பொதுமுடக்க காலத்தில் வருமானம் இல்லாமல் அவதிப்படும் வேளையில் பெட்ரோலிலிருந்து காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களில் விலைகளும் அதிகமாகிவிட்டது. இதனால், நடுத்தர குடும்பங்கள் உணவு உட்கொள்ளும் அளவை குறைத்துக்கொண்டனர்; வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர் காய்கறிகள் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள்; இதனால், போதுமான ஊட்டச்சத்தும் நோய்எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடுகிறது. இது இந்த நோய்பரவல் நேரத்தில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும். ஆகையால், ரேஷனில் காய்கறிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறுகிறார்.

பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுதொழில்கள்:

“பொதுமுடக்க காலத்திலிருந்து தையல் போன்ற சுயதொழில் நடத்திய பெண்களும் சரி, சிறு நிறுவனங்களில் வேலைக்கு சென்ற மக்களும் சரி, அவர்களின் வேலையை தொடரும் நிலையே இல்லாமல் போய்விட்டது. இப்படி அவதிப்படுபவர்களுக்கும் அரசாங்கம் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 

எந்த பொருளாதார கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், அதை இந்தியாவில் எங்கும் அமல்படுத்தவில்லை. கொரோனாவால் வருமானம் ஈட்டுகிற கணவர்களை இழந்த பெண்களும், சம்பாதிக்கும் ஒரே உறுப்பினரை இழந்த குடும்பங்களும் இந்தியாவில் பல இருக்கின்றது. 

ஆகையால், கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்பத்திற்கு தலா ரூபாய். 7,500/- (குறைந்த பட்சம் ஆறு மாத காலம்) வழங்கவேண்டும். மேலும், பெண்கள் தொழில் துவங்குவதற்கு வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்கவும், தனித்து வாழும் பெண்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டிக்கு கடன் பெற முன்னுரிமை வழங்கவும், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் அடிப்படையில் 200 நாள் வேலையும் ரூபாய். 600/- கூலியும் வழங்கவும், அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை கொண்டு வந்து நகர்புறத்தில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கூறுகிறார்.

பொதுமுடக்க காலத்தில் நடந்த குடும்ப வன்முறைகளைப்பற்றி மாநில பொதுச்செயலாளர் கூறுவது:

“கொரோனா காலத்தில் நாங்கள் எங்கள் தொலைபேசி எண்களை உதவி எண்களாக மக்களுக்கு கொடுத்தோம்; முதல் வாரத்திலேயே ஐம்பது வழக்குகளை சந்தித்தோம். 

இதேபோல, அரசாங்கமும் பெண்களின் பாதுகாப்புக்கான இலவச உதவி எண்-181 வெளியிட்டனர். வெளியிட்ட 10 நாளில் தமிழ்நாட்டில் 300 வழக்குகள் பதிவானது; ஆனால் அதற்க்கு சரியாக நடவடிக்கைகள் நடத்தாதது வேதனையளிக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். ஊரடங்கு சமையத்தில் மது அருந்தும் வாய்ப்பு இல்லாததினால், அந்த கோவத்தை வீட்டில் எளியோரான மனைவி மட்டும் குழந்தைகளிடம் செலுத்துகின்றனர். ஊரடங்கினால் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டதால் பெண்கள் வீட்டுக்குள்ளே அடைந்து மிகவும் மோசமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஆகையால், மாவட்டத்திற்கு ஒரு உதவி எண் உருவாக்கி, அதற்க்கு வரும் வழக்குகளை சந்திக்க தேவையான குழுவை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறுகிறார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madhar sangam survey of those affected by micro financial institutions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express