சென்னை எழிலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றவர்கள் யாரும் அந்தக் கட்டடத்தைக் கடந்து சென்றிருக்க முடியாது. ஆனால், அதனை ஒரு கட்டடமாகத்தான் கடந்து சென்றிருப்பீர்கள். குப்பையும், கூளமுமாக உள்ள அந்த இடத்தை கொஞ்சம் கூர்மையாக கவனித்திருக்கிறீர்களா? அப்படி கவனித்திருந்தால், அது உங்களுக்கொரு அரண்மனையாக தெரிந்திருக்கும். எழிலக கட்டடத்தின் பின்புறம் பாழடைந்த கட்டடமாக, ஏதோ குடோனுக்குள் வந்ததுபோன்ற தோற்றத்தில் ஒரு கட்டடம் இருக்கிறதே, அது ஒரு காலத்தின் ஆற்காடு நவாப்பின் அரண்மனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? முடியாது, ஏனென்றால் அதன் இப்போதைய நிலைமை அப்படி உள்ளது. கேட்பாரற்று, பராமரிக்க யாருமின்றி கிடக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/images.jpg)
18-ஆம் நூற்றாண்டில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, திருநெல்வேலி ஆகியவற்றை கர்நாடக நவாப் ஆட்சியின் கீழ் இருந்தன. அதனை, முகமது அலி கான் வாலாஜா என்ற ஆற்காடு நவாப் ஆண்டார். இப்போது தெரிகிறதா, வாலாஜா சாலையின் பெயர் காரணம்? அது ஒருபுறமிருக்கட்டும். 1764-ல் வாலாஜா புனித ஜார்ஜ் கோட்டையில் அரண்மனை கட்ட வேண்டும் என நினைத்தார். ஆனால், அதற்கான இடம் ஜார்ஜ் கோட்டையில் சரிவர அமையாததால், சேப்பாக்கத்தில் அரண்மனை கட்ட முயன்றார்.
அதனால், சேப்பாக்கத்தில் தற்போது அமைந்திருக்கும் எழிலக கட்டடத்தில் 117 ஏக்கர் நிலத்தை தனியாரிடமிருந்து வாங்கினார். இந்தோ - செராசெனிக் கட்டடக் கலை மூலம் சேப்பாக்கம் அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. வடக்குப்பகுதி கல்சா மஹால், தெற்கு பகுதி ஹூமாயுன் மஹால் எனவும் அழைக்கப்பட்டது. கடற்கரையை நோக்கிய அந்த அரண்மனை அழகின் ஒட்டுமொத்த உருவமாக காட்சியளித்தது.
நவாப் ஆங்கிலேயரிடம் பட்ட கடனை அடைக்கமுடியாமல் போனது. அதனால், சேப்பாக்கம் அரண்மனையை ஆங்கிலேய அரசு 1855-ல் ஏலம் விட்டது. நவாப் வாரிசுகள் அரண்மனையைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ஏலத்தில் அந்த அரண்மனையை எடுக்க யாருமில்லாததால் அரசாங்கம் அதனைக் கைப்பற்றியது. அதன்பிறகு, 1871-ல் பொதுப்பணித்துறை கட்டடத்தை ராபர்ட் சிஸ்ஹோம் என்பவர் கட்டினார். 1950-ஆம் ஆண்டு எழிலகம் கட்டப்பட்டதும், அரண்மனை முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டது.
இந்த அரண்மனையை தமிழக அரசு மீட்டு பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று அறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது.