சென்னை என்பது வார்த்தை. மெட்ராஸ் எமோஷன். சென்னை இன்று (ஆகஸ்ட் 22) பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. சென்னையின் வரலாறு மிக நீண்டது. உழைப்பாளிகளால் கட்டமைக்கப்பட்டது இந்த நகரம். வெளியூர்களில் இருந்து சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் இந்த நகரத்தை திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால், இங்கிருந்து எங்கும் செல்ல மாட்டார்கள். சென்னையில் நாம் நிச்சயம் சென்றே ஆக வேண்டும் என சொல்லக்கூடிய அளவில் பல இடங்கள் இருக்கின்றன. சென்னையின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கட்டடங்கள், அதன் கட்டுமான கலை, வியக்கும் வகையிலான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் பல உள்ளன. சென்னையின் முதல் ரயில் நிலையம் எங்கு முதன்முதலில் கட்டப்பட்டது என்று தெரியுமா?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை. சென்னை ராயபுரத்தில் கி.பி. 1856-ஆம் ஆண்டு முதன்முதலில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை ஜூன் 28-ஆம் தேதி, அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில், அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமையிடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது. அதன் பிறகுதான் சென்ட்ரல் ரயில் நிலையம் பார்க் டவுனில் கட்டப்பட்டது. இந்த ரயில் நிலையம் ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிறகு மக்கள், ரயில் போக்குவரத்திற்காக அதனை நோக்கி நகர ஆரம்பித்தனர். ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல மெல்ல தன் அழகை இழக்க ஆரம்பித்தது. சென்னை என்றாலே சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தானே திரைப்படங்களிலும் காண்பிக்கிறார்கள். ராயபுரம் ரயில் நிலையத்தின் தற்போதைய நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.