சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகளும் இன்று பதவிஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக 6 நீதிபதிகள் பதவியேற்றதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 54-ஆக உயர்ந்துள்ளது.

நீதிபதி பவானி சுப்பராயன்

நீதிபதி பவானி சுப்பராயன் 2006-ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வில், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரித்திகா யாசினிக்கு சட்ட ரீதியில் உறுதுணையாக நின்றவர்.

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை பூர்வீகமாக கொண்‌டவர் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.இவர் தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞராகவும், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார்.

கட்டப் பஞ்சாயத்தை ஒடுக்குவது குறித்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி சுவாமிநாதன்

நீதிபதி சுவாமிநாதன் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர். ‘மாதொருபாகன்’ புத்தகப் பிரச்னையில் அரசு அமைத்த பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றவர்.

நீதிபதி அப்துல் குத்தூஸ்

தேனி மாவட்டம் கம்பத்தை பூர்வீகமாக கொண்டவர் நீதிபதி அப்துல் குத்தூஸ். அவரது தந்தை ஏ.அப்துல் ஹாதி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி. அப்துல் குத்தூஸின் தாத்தா எஸ்.கே.அஹமத் மீரான் சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி தண்டபாணி

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் நீதிபதி தண்டபாணி. கடந்த 2000-ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் உள்ளிட்ட பொறுப்புகளை வ‌கித்தார். பின்னர் 2006-ம் ஆண்டு மத்திய அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் ஆஜராகிவந்தார்.

நீதிபதி பி.டி.ஆதிகேசவலு

நீதிபதி பி.டி.ஆதிகேசவலு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்காக பணியாற்றியிருக்கிறார். குறிப்பிடும் படியாக ஸ்டேட் வங்கி, இந்திய உணவுக் கழகம், தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் அமைப்பு ஆகியவற்றின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 2001-2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close