தமிழ்நாட்டை பாதிக்கும் மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசுவாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த திட்டம் மக்களுக்கு உகந்தது அல்ல எனவும், இந்த திட்டத்தால் பல நோய்கள் பரவும் என்பன உள்ளிட்ட சோலார் திட்டம் குறித்து பல தவறான தகவல்களை கோவையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் வாட்ஸ் ஆப்-பில் பரப்பியுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஜாகீர் உசேன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறாக வழிநடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாகீர் உசேன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு வந்த தகவலை பார்வேர்டு மட்டுமே செய்ததாகவும், தான் உள்நோக்கத்தோடு எந்த தகவலும் பரப்பவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசுக்கும், அமைச்சருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த தகவலை பரப்பியுள்ளதால், இந்த விவகாரத்தில் இரக்கம் காட்டக்கூடாது என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பேச்சுரிமைக்கான முதல் ஓட்டு தன்னுடையதாகத்தான் இருக்கும். ஆனால், பொறுப்பற்ற வதந்திகள் பரப்புவதை எற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் பரப்பிய அடிப்படை ஆதாரமற்ற தகவல்களால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பொய்யான தகவல் பரப்புவதே மிகப்பெரிய மாசுவாக உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
சமூக வலைதலங்களில் எந்த வித தார்மீக பொறுப்பும் இல்லாத நபர்களால் செய்திகள் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டிய நீதிபதி, மனுதாரர் தன் தவறை உணர்ந்து தான் பரப்பிய தகவல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பரப்பியதாக அதே வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட சம்மதித்தால், அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்து விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.