வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது தற்காலிகமாக எந்தவித ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 10 நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகர் என்பவர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீதிமன்ற தடையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராகினர். பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து, தலமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பல்வேறு கட்டபேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் பேராட்டம் தொடர்ந்ததாக தலைமை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், உயர் நீதிமன்றம் தெரிவிக்கும்போது, 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை நிபுணர் குழுவானது வரும் 30-ம் தேதிக்குள் அரசுக்கு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அக்டோபர் 13-ம் தேதிக்குள் பரிசீலனை செய்து நிபுணர் குழுவின் பரிந்துரைகளை எவ்வளவு காலத்திற்குள் அமல்படுத்த முடியும் என்பதை அறிவிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும்பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அவர்களின் சம்பளத்திலும் பிடித்தம் செய்யக் கூடாது என்று கூறி வழக்கு விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.