தி.மு.க. மனித சங்கிலிக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில், ‘நீட்’ நடத்தப்பட்டது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் இதில் அதிகபட்ச கேள்விகள் அமைந்தன. இதனால் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை.
எனவே ‘நீட்’டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் டெல்லியில் முகாமிட்டு, ஏற்கனவே தமிழக அரசு இது தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தரும்படி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்கள். பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க. (பு.த.அம்மா) தலைவர் ஓ.பி.எஸ். ஆகியோரும் டெல்லியில் மத்திய ஆட்சியாளர்களை சந்தித்து வலியுறுத்தினர்.
இன்னொரு பக்கம் இதே பிரச்னைக்காக ஜூலை 25-ம் தேதி இந்திய கம்யூனிஸ்டும், 26-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் மறியல் போராட்டங்களை நடத்தின. பிரதான எதிர்கட்சியான தி.மு.க., இதர எதிர்கட்சிகளின் ஆதரவுடன் ஜூலை 27-ம் தேதி தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் மனிதசங்கிலி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தது. ஆனால் இப்படி போராட்டம் நடத்துவது, நீட் தேர்வை அனுமதித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்ப்பதற்கு சமம் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சத்தியமூர்த்தி, சுரேஷ்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். எனவே தி.மு.க.வின் மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை ஏற்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.
ஆனால் இன்று (ஜூலை 26) பிற்பகலில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, மேற்படி மனுவை தள்ளுபடி செய்தனர். எனவே நாளை நடக்கவிருக்கும் தி.மு.க.வின் மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை இல்லை. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என தி.மு.க. தலைவர்கள் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.