கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டதும், மேலும் இருவர் உயிருக்கு போராடி வரும் சம்பவமும் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை யாகப்பா நகர் குறிஞ்சி நகரை சேர்தவர் ஜெகஜோதி (70), இவருக்கு வேல்முருகன், குறிஞ்சி குமரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு, தேவி என்ற பெயரில் மனைவியும், ஜெயசக்தி (20) என்ற ஒரு மகளும், பிரவீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். பிரவீன் விருதுநகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
அதேபோல், குறிஞ்சி குமரனுக்கு தங்கசெல்வி என்ற பெயரில் மனைவியும் மற்றும் மோனிகா, தாரணி என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்த குடும்பம் அப் பகுதியில் தனியார் பள்ளி, ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குடும்பத்தினர் நேற்று முன்தினம் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் ஊர் திரும்பிய அவர்கள், வரும் வழியில் விருதுநகர் கல்லூரியில் பிரவீனை இறக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து மதுரை வீட்டிற்கு வந்த குடும்ப உறுப்பினர்கள் 8 பெரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், ஆம்புலன்சையும் அழைத்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக தெரிகிறது. இதனிடையே, தற்கொலைக்கு முயன்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், வேல்முருகனின் மனைவி தேவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தங்க செல்வி மற்றும் மோனிகா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த பிரவீன் விருதுநகரில் இருந்து மதுரை வந்துள்ளார். தங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று அக்குடும்பத்தினர் கடிதம் எழுதி வைத்துள்ளனர். எனவே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கம்பக்கத்தினர் சிலரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தீபாவளி சீட்டு நடத்தியதால் அவர்களுக்கு சிறிது கடன் தொல்லை இருந்ததாகவும், அதனால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அக்கம்பக்கத்தில் வசிக்கும் வேறு சிலர் கூறும்போது, அந்த குடும்பத்தினர் மிகவும் நாணயமானவர்கள். ஏலச்சீட்டு நடத்திய போது கூட யாரையும் ஏமாற்றியதில்லை என தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.