மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது “ எய்ம்ஸ் மருத்துவமனை இன்றைக்கு காலதாமதம் ஆவதற்கு காரணம் மாநில அரசு இடத்தை கையகப்படுத்தி தராதது என்கிற வகையில் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இது ஒரு பெரிய பொய். இதோடு மட்டுமல்லாமல் ரூ. 1200 கோடியில் திட்டமிடப்பட்டது ரூ.1900 கோடியாக உயர்ந்து இருக்கிறது என்ற தகவலையும் சொல்லி இருக்கிறார்.
நிதி அமைச்சர் அரசு நிலம் சரியாக தேர்வு செய்யவில்லை என்று கூறியதில் நியாயம் இல்லை. நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் இன்று சொல்கிறார். ஆனால் 4 வருடங்களுக்கு முன்பு நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்? . அது மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்த இடம் அதனை மத்திய அரசுக்கு மாற்றி கொடுத்த பின்னர்தான், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
2020-2021ம் ஆண்டில் எப்படி 222 ஏக்கரை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மத்திய அரசு 2015ம் ஆண்டு 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தது. உத்தரபிரதேசம், அசாம், ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாட்டில், மதுரை உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. மற்ற எல்லா இடங்களிலும் மருத்துவமனை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் எல்லாம் மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதியில் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கடனில் மருத்துவமனையை அமைக்க அரசு ஏன் முடிவு செய்தது என்று தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“