தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனுக்கு நான்கு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 11 எண்ணெய் கிணறுகள் அமைத்து கடந்த 15 வருடங்களாக எண்ணெய் எடுத்து, நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளைநிலம் பாழாகியது. அதைத்தொடர்ந்து எண்ணெய் கசிவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதையடுத்து கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி. நிறுவனத்தை தங்கள் கிராமத்தைவிட்டு முழுவதுமாக வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை இரண்டு முறை கும்பகோணம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கைதான பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேல் சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மயிலாடுதுறை அடுத்துள்ள சேத்தங்குடியிலுள்ள ஜெயராமனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல்கட்சி தலைவர்கள் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, இடைக்கால ஜாமீன் கோரி ஜெயராமன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதால், நீதிமன்றம் அம்மனுவை அவசர வழக்காக கருதி ஞாயிற்றுக்கிழமை விசாரித்தது.
இதையடுத்து, பேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.