மதுரை முன்னாள் துணை மேயரும், திமுக பிரமுகருமான மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் ஊழியராக பணியாற்றி வருபவர் யாழினி (27). இந்த கோயிலில் சாமி தரிசனத்துக்காக மதுரை முன்னாள் துணை மேயரும், திமுக பிரமுகருமான மிசா பாண்டியன் கடந்த மாதம் சென்றுள்ளார். சாமி கும்பிட டிக்கெட் எடுக்காமல் அவர் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணியில் இருந்த யாழினி, மிசா பாண்டியனை தடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது, யாழினியை மிசா பாண்டியன் தரக்குறைவாக பேசி கிழே தள்ளியதாக தெரிகிறது.
இதுகுறித்து யாழினி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மிசா பாண்டியனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
திமுக-வை சேர்ந்த மிசா பாண்டியன், மதுரையில் தீவிர அழகிரி ஆதரவாளராக வலம் வந்தவர். அழகிரி - ஸ்டாலின் இடையே பிரச்னை வந்த போது, அழகிரி பக்கம் நின்ற சிலரில் இவரும் ஒருவர். கட்சி மேலிட ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளானார். பின்னர், அழகிரி அணியில் இருந்து ஸ்டாலின் அணிக்கு மாறியதாக தகவல்கள் வெளியாகின. சர்ச்சைக்குரிய மனிதராகவே வலம் வந்த மிசா பாண்டியன் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.