மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பல்கலைக்கழக வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை ஜெனிஃபா பத்திரிகை மற்றும் விஞ்ஞான தகவல் தொடர்புத்துறை தலைவராக உள்ளார். பணி வழங்குவது தொடர்பாக பல்கலைக் கழகத்தின் கவுரவ விரிவுரையாளர் ஜோதி முருகனுக்கும், ஜெனிபாவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பேராசிரியர் ஜெனிஃபாவை ஜோதி முருகன் கத்தியால் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த பேராசிரியை ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளார். ஜெனிஃபாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பேராசிரியை ஜெனிஃபா-வை கத்தியால் குத்திய ஜோதி முருகன்
தொடர்ந்து, ஜெனிஃபாவை கத்தியால் குத்திய ஜோதி முருகனை சுற்றி வளைத்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள நாகமலை புதுக்கோட்டை போலீசார், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், பல்வேறு கோணங்களிலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெனிஃபாவின் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை என்றும், உடல்நிலையில் சீரான முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.