மனிதர்கள் மட்டுமல்லாது உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது தண்ணீர்தான்....
முன்பெல்லாம் கோடைக்காலத்தில் மட்டும்தான் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை வரும். ஆனால், இப்போதோ எல்லாக் காலநிலையிலும் தண்ணீர் தட்டுப்பாடாகத்தான் இருக்கிறது. எப்போதாவதுதான் மழை வரும். அந்த மழையாலும் பயன் இருக்காது. காரணம் மழைநீர், சாக்கடையிலோ, சுகாதாரமற்ற நீர்நிலைகளிலோ கலந்து வீணாகிறது. வீணாவது மழை நீர் மட்டுமல்ல, நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையும்தான். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் நம்ம ஊரில் எப்போதாவதுதான் மழை பெய்கிறது; அந்த நீரை வீணாக்காமல் சேகரித்து வைத்தாலே தண்ணீர்த் தட்டுப்பாடு வராது...
மூன்றாம் உலகப்போர் நீரால் வரப்போகின்றது என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தனி ஆளாக நின்று நீரின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு மற்றும் நீர் மேலாண்மை குறித்து அமைதியாக மதுரையில் புரட்சி ஏற்படுத்தி வருகிறார் கார்த்திகேயன்.
நன்னீர் என்ற அமைப்பை நிறுவி, அதன்மூலம், நீரின் பயன்கள், பல்வேறு வகையான நீர் சுத்திகரிப்பு, மறைநீர் ( virtuality water) உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம், மதுரையில் தனி பயிற்சி மையத்தை ஏற்படுத்தி பள்ளி மாணவர்களிடையேயும், நீர் மேலாண்மை குறித்த ஆர்வம் உள்ளவர்களிடையேயும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கார்த்திகேயன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ( தமிழ்) இணையதள வாசகர்களுக்காக 'நன்னீர்' கார்த்திகேயன் அளித்த பேட்டி...
நீர் மேலாண்மை குறித்த ஆர்வம் எப்படி வந்தது?
மழை நீர் சேகரிப்பு குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். நம் மாநிலத்தில் இது சட்டமாக அமல்படுத்தப்பட்டபோதிலும், நமது மக்களின் போதிய ஆர்வமின்மையால், இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். நீர் மேலாண்மையில், தென்னிந்தியாவில் கர்நாடகா முதன்மை இடத்தை பிடித்துள்ளது. நீர் மேலாண்மைக்கென ஐதராபாத்தில் தனி அமைப்பே இயங்கி வருகிறது. தமிழக அரசின் நிர்வாகத்திலும், பொதுப்பணித்துறையில் இதற்கென ஒரு அலுவலர் உள்ளார். அவர் ஒருவரால் மட்டுமே, இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் போதிய அளவிற்கு ஏற்படுத்திவிடமுடியாது. தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அறிய வேண்டும் என்று விரும்பி, 5 ஆண்டுகள் இதற்காக முன்னேற்பாடுகளை செய்தபின்னரே, இந்த நன்னீர் அமைப்பை துவங்கினேன்.
எப்படி இதை கொண்டு செல்கிறீர்கள்?
பள்ளிமாணவர்களிடையே, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை முதலில் கொண்டு செல்ல வேண்டும் என்பதனடிப்படையிலேயே தற்போது இயங்கி வருகின்றேன். பள்ளி நிர்வாகங்களிடம் பேசி, அவர்களது பள்ளி மாணவர்களை இந்த பயிற்சி மையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு நீரின் ஆதாரம், பல்வேறு வகையான நீர், அவற்றின் பயன்பாடு, மறைநீர். ஜீரோ டே உள்ளிட்டவைகள் குறித்து நேரடியாக விளக்கம் அளித்து வருகிறேன்.
மழைநீர் சேகரிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளேன். இதை ஒவ்வொரு பள்ளிகளின் ஆய்வகங்களிலும் வைத்து மாணவர்களுக்கு அவர்களே போதிக்கும் வகையில் பள்ளி நிர்வாகங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி, சர்வதேச நீர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை, தங்களது நன்னீர் அமைப்பின் மூலம் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். சிறந்த குறும்படங்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
ஜீரோ டே பாதிப்பு : தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை போன்று, இந்தியாவின் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஜீரோ டே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை நாம் பெற்று மற்றவர்களிடத்திலும் இதுதொடர்பான அறிவை ஏற்படுத்தினால், நமது வருங்கால சந்ததியினருக்கு தண்ணீர் பற்றாக்குறை என்ற பெரும்பாவத்தை விட்டுச்சென்ற பாவம் நமக்கு வேண்டாம் என எண்ணி இன்றே பாதுகாப்பாக நீர் மேலாண்மையை அமல்படுத்துவோம் என்று உறுதி ஏற்போமாக....
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற http://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.