/indian-express-tamil/media/media_files/2025/10/10/madurai-youth-police-custody-death-case-high-court-transfer-to-cbcid-tamil-news-2025-10-10-20-06-40.jpg)
தினேஷ் குமார் காவல்துறையால் அழைத்து செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், மதுரையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் - முத்துலட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (வயது 30). இவர் ஐ.டி.ஐ. படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையிலான தனிப்படை காவலர்கள் காமு, நாகராஜ் ஆகியோர் ஒரு வழக்கில் விசாரணை நடத்த வேண்டுமென கூறி தினேஷ்குமாரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், தினேஷ்குமாருடன் அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகிய இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காலை 9 மணிக்கு தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபோது, தினேஷ்குமார் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதனால் அவர் வழக்கறிஞருடன் காவல்துறையினரிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், வண்டியூர் பகுதியில் உள்ள கால்வாயில் ஒரு சடலம் கிடப்பதாக தகவல் வந்தது. உடனே சென்ற தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டபோது, அது தினேஷ்குமாரின் உடலாக அடையாளம் காணப்பட்டது. பின்னர் மதியம், தினேஷ்குமாரின் தந்தையை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்தனர். அப்போது, “விசாரணைக்குப் பின் தினேஷ்குமார் உள்ளிட்ட மூவரையும் அண்ணாநகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரும்போது, தினேஷ்குமார் தப்பியோட முயன்று வாய்க்காலில் குதித்ததால் மூழ்கி இறந்தார்” என காவல்துறையினர் விளக்கம் அளித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர், “விசாரணை என்ற பெயரில் தினேஷ்குமாரை சித்ரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துவிட்டனர்” என குற்றம் சாட்டினர். இந்த செய்தி பரவியதும் தினேஷ்குமாரின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் ஒன்று கூடி, “தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. நீதி விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனக் கோரி அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “தினேஷ்குமாரின் சடலம் மதியம் 1 மணிக்கே மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது மாலை 5 மணிவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்?” எனவும் உறவினர்கள் கேள்வி எழுப்பியனர்.
இந்நிலையில், மதுரை இளைஞர் தினேஷ்குமார் மரணம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி, மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கின் தன்மை மற்றும் சந்தேகங்கள் காரணமாக, நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி-க்கு விசாரணை மாற்றம் செய்ய உத்தரவிட்டது. மேலும், மதுரை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தினேஷ் குமார் காவல்துறையால் அழைத்து செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் இந்த சம்பவம், மதுரையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.