தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2023-24-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்காக ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் சேகரிக்க சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவதாக கூறிப்பிட்டுள்ளார்.
மேலும், விருப்பம் உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil