Advertisment

இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: மகேந்திரகிரி வளாகம் இன்று மூடப்படுகிறது

Mahendragiri ISRO: விண்வெளித்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வளாகத்தின் ஆரோக்கியம் மிக முக்கியம்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: மகேந்திரகிரி வளாகம் இன்று மூடப்படுகிறது

Mahendragiri isro employee coronavirus, Mahendragiri isro employee covid 19 positive, Mahendragiri tirunelveli, dmk mp gnana thiraviam, இஸ்ரோ, மகேந்திரகிரி இஸ்ரோ, மகேந்திரகிரி இஸ்ரோ கொரோனா வைரஸ்

ISRO Mahendragiri Tamil News: மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த வளாகம் இன்று மூடப்படுகிறது. பணிக்கு வரும் அலுவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

Advertisment

திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் பணகுடி அருகேயுள்ள பகுதி, மகேந்திரகிரி. இங்கு இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கு (இஸ்ரோவுக்கு) சொந்தமான வளாகம் இருக்கிறது. இஸ்ரோ புரப்பல்ஷன் காம்ப்ளெக்ஸ் (ஐ.பி.ஆர்.சி) என்கிற இந்த வளாகத்தில்தான் இந்தியா விண்வெளிக்கு ஏவும் அனைத்து ராக்கெட்டுகளும் உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றன. பிறகு அந்த ராக்கெட்டுகளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு சென்று, செயற்கைக் கோள்களை அனுப்ப பயன்படுத்துகிறார்கள்.

இந்திய விண்வெளித்துறைக்கு முதுகெலும்பாகத் திகழும் இந்த வளாகம், பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்தது. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், இதர டெக்னீசியன்கள் என சுமார் 680 பேர் இங்கு பணிபுரிகிறார்கள். இவர்களில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இந்த வளாக நிர்வாகம் தரப்பில் வழங்கப்பட்ட துறை ரீதியான சுற்றறிக்கையில், ‘ஐ.பி.ஆர்.சி. ஊழியர் ஒருவருக்கு ஜூன் 21-ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அவர் இங்கு சென்று வந்த இடங்கள் அனைத்தும் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட வேண்டும். எனவே 22-ம் தேதி மட்டும் ஐ.பி.ஆர்.சி மூடப்படுகிறது. எனினும் அத்தியாவசியப் பணிகள் மட்டும் நடைபெறும்’ என கூறப்பட்டிருக்கிறது. தீயணைப்புப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பணிகள் மட்டும் இன்று நடைபெறும் எனத் தெரிகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கொரோனா பரவல் அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. எனினும் இஸ்ரோ வளாகத்திற்குள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது, அங்கு பணி செய்கிற விஞ்ஞானிகள், ஊழியர்கள் மத்தியில் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து ஊழியர்கள் தரப்பில் நாம் பேசியபோது, ‘பொதுவாக மத்திய அரசு ஊழியர்கள் 33 சதவிகிதம் பேர் ஷிப்ட் முறையில் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவு இருக்கிறது. அதேசமயம், உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் வரவேண்டும்.

இஸ்ரோவைப் பொறுத்தவரை, லெவல் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும். மற்றத் துறைகளைப் போல் அல்லாமல், இங்கு அதிகபட்சம் பேர் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளாக (லெவல் 12-க்கு மேல்) இருக்கிறார்கள். அதாவது, மொத்தம் பணியாற்றுகிற சுமார் 680 பேரில் 480 பேர் தினமும் வரவேண்டிய ‘ரேங்க்’-கில் இருக்கிறார்கள். இதனால் அலுவலகத்தில், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது சிரமம் ஆகிவிடுகிறது.

தவிர, சுற்றியுள்ள ஆவரைக்குளம், காவல் கிணறு, வடக்கன்குளம், பணகுடி பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 2000 ஒப்பந்த ஊழியர்கள் இந்த வளாகத்திற்கு வருகிறார்கள். இவர்களில் பலர் கூடுகிற இடமாக இங்குள்ள கேன்டீன் இருக்கிறது.

உடனடியாக இங்கு லெவல் 12 மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பொருளாதாரத்திற்கு வேலை முக்கியம் என்றாலும், அனைவரின் பாதுகாப்பு மிக முக்கியம். எனவே அவர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும். இன்னொரு கோயம்பேடாக மகேந்திரகிரி மாறிவிடக்கூடாது என்கிற கவலை எங்களுக்கு இருக்கிறது’ என்றார்கள் அவர்கள்.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவரும், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானதிரவியத்திடம் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக பேசினோம். அவர் கூறுகையில், ‘இந்தப் பிரச்னை எனது கவனத்திற்கும் வந்திருக்கிறது. சீரியஸாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பேச இருக்கிறேன்’ என்றார்.

இஸ்ரோ நிர்வாகம் தரப்பு கருத்தை அறிய முடியவில்லை. விண்வெளித்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வளாகத்தின் ஆரோக்கியம் மிக முக்கியம். எனவே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Isro Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment