Nellai Mahendragiri ISRO Oxygen Plant : தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையால், மருத்துவ கட்டமைப்பு ரீதியிலான பல்வேறு இக்கட்டுகளை நாம் சந்தித்து வருகிறோம். தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவும் அதிகரித்து வருகிறது. தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்களில் மேலும் ஆக்சிஜன் உற்பத்தி அளவை அதிகரிக்க, தமிழக அரசு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மகேந்திரிகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்தில், வின்வெளி உந்து சக்திக்காக திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், திரவ ஆக்சிஜன் உற்பத்தியில் சிறு மாறுதல்களை ஏற்படுத்தி தற்போது, மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜனாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இஸ்ரோ மையம் நாள் ஒன்றுக்கு, 11 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, தமிழக அரசுக்கு வழங்கி வருகிறது. மேலும், இங்கு திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல தேவையான வாகன வசதிகளும் இருப்பதால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு, எதிர்வரும் நாள்களில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கும் என்பதால், உற்பத்தியை அதிகரிக்கும் சாத்திக கூறுகளை ஆராய்ந்து வரும் வேளையில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜனை கையாளுவதற்கும், சேமிப்பதற்கும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை சிறு மாற்றங்ளின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களாக எளிதில் மாற்றிவிட முடியும் என்ற காரணத்தால், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் படி, இஸ்ரோ தலைவர் சிவனிடம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் MET, TCT, IET, SIET என 4 ராக்கெட் சோதனை தளங்கள் உள்ளன. இங்கு ஒரு சில ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரங்களை பொருத்துவதன் மூலம், ஒன்றிரண்டு வாரங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கோரிக்கையை இந்திய விண்வெளித்துறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து, வேறு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நிலை உருவாகும் என தெரிய வருகிறது.
இந்நிலையில், நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.காந்தியிடம் பேசினோம். ‘மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்தில் ராக்கெட் உந்து சக்திக்காக நைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நைட்ரஜன் உற்பத்தியில் உப தயாரிப்பாக ஆக்சிஜனும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு திரவ ஆக்சிஜன் உற்பத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தி, மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருந்த சூழலில், இஸ்ரோ மையத்திடன் ஆக்சிஜன் வேண்டி கோரிக்கை வைத்தேன். கோர்க்கையை அடுத்து., ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது, இஸ்ரோ மையத்தின் தலைவர் சிவனிடம் பேசினேன். இஸ்ரோ நிறுவனத்தின் ஆக்சிஜன் தயாரிக்கும் முழு திறனையும், 3 சிஃப்டுகளில் பணியாட்கள் வேலை செய்து ஆக்சிஜன் தயாரித்து வருவதாக கூறினார். இந்த நிலையில், அங்கு தற்போதைய அளவை விட, அதிகமான அளவு ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்ற தகவல்களும், கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரிக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யவும், இஸ்ரோவின் ஆக்சிஜன் தயாரிப்பு குறித்து விவாதிக்கவும் கோரிக்கை விடுக்கவும் வரும் திங்கள் கிழமை இஸ்ரோ மையத்தின் தலைவர் சிவனை சந்திக்க உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும். அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் பெரும் தட்டுப்பாடுகளை தவிர்க்க உதவும். சமூக ஆர்வலர்கள் சிலர், நெல்லை மாவட்டத்தின் கங்கைக் கொண்டானில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான வசதிகள் உள்ளதாக கூறி வருகின்றனர். அங்கு ஆக்சிஜன் தயார்க்கும் வசதிகள் இருப்பது உண்மைத் தகவலாக இருந்தால், உடனடியாக அங்கு ஆக்சிஜன் தயாரிப்பை தொடங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்’ என, கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.