சென்னையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 11) நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிரந்தரத் தலைவர் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானம் ஒரு ஜனநாயக கட்சியில் நிரந்தர தலைவர் என்பது சரியா? இது தேர்தல் ஆணையத்தின் விதி மீறலா? என்று தமிழக அரசியலில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கிவரும் நிலையில், ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தமிழகத்தின் இருபெரும் கட்சிகள் தங்களின் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். கமல்ஹாசனுக்கு முன்பு காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஓய்வுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தங்கள் கூட்டணியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 11) மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக தன் திறமை, தொழில், செல்வம், புகழ் அனுபவம் அனைத்தையும் பயன்படுத்தி இரவு பகல் பாராது உழைக்கும் நம் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக செயல்பட வேண்டும் என அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாகவும் வைக்கப்பட்ட கோரிக்கையை தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி கமல்ஹாசன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில், “கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது. தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, தனித்துக் களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் எகமனதாக அளிக்கப்படுகிறது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு உழைத்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களைப் பெரு வெற்றி பெறச் செய்து நமது தலைவர் கமல்ஹாசனை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் நமது கனவினை நனவாக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களான கமல்ஹாசன் நிரந்தரத் தலைவர், அனைத்து அதிகாரமும் கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுகிறது என்ற தீர்மானங்கள் தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஒரு ஜனநாயக ரீதியான அரசியலில் உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஒருவரை நிரந்தரத் தலைவராக நியமனம் செய்வது சரியா? தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட வேண்டும் ஆனால், நிரந்தரத் தலைவர் என்று அறிவிப்பதால் தேர்தல் ஆணையத்தின் விதிகள் மீறப்படுகிறதா? என்ற கேள்விகளும் விவாதங்களும் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸை ஐஇ தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது: “தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பொதுக்குழு ஒப்புதல் வாங்க வேண்டும் என்றுதான் உள்ளது. பொதுக்குழுவில் தீர்மானம் போடுவது என்பது பொதுக்குழு நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட விஷயம். அந்த தீர்மானம் என்பது விருப்பமான ஒன்றுதான். உத்தரவு கிடையாது. அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். கோரிக்கை வைக்கிறோம் எல்லாம் திர்மானங்கள்தான். எங்கள் கட்சிக்கு நீங்கள்தான் எப்போதும் தலைவர் என்பது ஒரு உணர்ச்சிகரமான தீர்மானம் அவ்வளவுதான்.
அந்த மேடையிலேயே தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, ‘நிரந்தரம் என்பது நிரந்தரமில்லாத ஒன்று. அது எனக்கு உடன்பாடான விஷயம் கிடையாது. என் ஆயுளில் இந்த இடத்தில் நான் வேறொருவரை உக்கார வைத்துப் பார்க்க விரும்புகிறேன்’ என்று கூறினார்.
ஒரு பாதுகப்புக்காக முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவருக்கு கொடுப்பது உண்டு. அதனால், எதன் மீதும் மேலதிகாரம் செலுத்துவதற்கு, முடிவெடுப்பதற்கும் தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது என்ற தீர்மானமும் உள்ளது.
இது சம்பரதாயமாக தனிமனிதனோடு நடக்கிற கட்சி அல்ல. கம்யூனிஸ்ட்கள் மாதிரி சித்தாந்தத்தின் பேரிலும் இல்லாமல், ஜனநாயக ரீதியில் ஒரு தலைவனை பின்பற்றுகிற கட்சி வழக்கமாக எடுக்கிற ஒரு முடிவுதான்.
முதலமைச்சராக இல்லாத காலத்தில் மக்களின் முதல்வர் என்று போட்டுக்கொண்டார்கள். என்றும் முதல்வர் என்று போட்டுக்கொண்டார்கள். நிரந்தர முதல்வர் என்று போட்டுக்கொண்டார்கள். இதையெல்லாம், நாங்கள் பின்பற்றப்போவதில்லை.
கட்சியின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு மனப்பான்மை உள்ளவர்கள்தான். அவர்கள் தலைவரின் மீது வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துவதற்கு இதுபோல சொல்வது உண்டு. இறுதி முடிவு தலைவருடையதுதான். தலைவர் கமல்ஹாசன் இந்த தீர்மானத்தில் உடன்பாடில்லை. இந்த இடத்துக்கு உங்களில் இருந்து ஒருவர் உருவாகி வர வேண்டும். இந்த இடத்தில் உக்கார வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. அதற்கு உங்களை தகுதிபடுத்தி மேம்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இது பொதுக்குழுவுக்கும் தலைவருக்கும் இடையே இருக்கின்ற ஒரு அதிகாரம் சம்பத்தப்பட்ட பகிர்தலும் கருத்துகளும்தான். இது கட்சியினரின் அன்பின்பால் வெளிப்படுகிற ஒரு தீர்மானம்.
நிரந்தரம் என்பது நிரந்தரமில்லை என்பதுதானே விஷயம். யதார்த்தம் என்னவென்றால், அவர் ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் ஒரு கொள்கையில் இருந்து வந்திருக்கிறார். மக்களை அவர் பக்கம் திருப்பி அதை நடைமுறைப்படுத்துதல். அவரை பின்பற்றுபவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்.
தலைவர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு தானே அதிகாரம் செலுத்தக்கூடிய கட்சி எல்லாம் இருக்கிறது. பாமகவை எடுத்துக்கொண்டால், தலைவர் என்று கோ.க.மணி என்று ஒருத்தர் இருக்கிறார். ஆனால், அங்கே ராமதாஸைத் தாண்டி எதுவும் இல்லை.
அதனால், இந்த தீர்மானம் கட்சியினரின் அன்பின்பால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.