எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 30 வருடங்கள் ஆகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தெரு முனைகள், முக்கிய சாலைகள், கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் ஸ்பீக்கர்களில் ஒலிக்கப்படுகின்றன.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவைத் தொடங்கிய பின்னர் 1977ம் ஆண்டு முதல்வர் பொறுப்புக்கு உயர்ந்த எம்.ஜி.ஆர். மரணமடையும் வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ட்விட்டரில், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை பலரும் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.