கூகுளில் தேடினாலும் எம். நஞ்சப்பனூர் என்ற கிராமத்திற்கு வழியும் இல்லை. தேடல்களுக்கு முடிவுகளும் இல்லை. சுற்றிலும் வளர்ந்த நகர்ப்புற பகுதிகள், நடுவே சாலை, மின்சார வசதிகள் ஏதும் அற்ற ஒரு பழங்குடியின குடியிருப்பு. அந்த மலசர் பழங்குடி குடியிருப்பின் அடையாளமாகவும், அங்கு வாழும் மக்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் மாறியுள்ளார் 20 வயது மாணவி சங்கவி.
2018ம் ஆண்டு பிச்சனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சங்கவி, 2021ம் நடைபெற்ற தேர்வில் 202 கட்-ஆப் மதிப்பெண்களை பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து அவரிடம் பேசியது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ். ”2018ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். ஆனால் வெற்றி பெற இயலவில்லை. பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து விலகும் நிலையும் ஏற்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரணப் பொருட்களை தர வந்து போது தான் பலருக்கும் இங்கே ஒரு கிராமம் இருக்கும் என்றே தெரிய வந்தது. அங்கு வந்தவர்களிடம் என்னுடைய பிரச்சனை குறித்து கூறினேன். பிறகு உள்ளூர் செய்தித் தாள்களில் சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் படிப்பு தடை பெற்றது என்று செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஆண்டு தான் எனக்கு சாதி சான்றிதழ் கிடைத்தது” என்றார் சங்கவி.
முனியப்பன் - வசந்தாமணி தம்பதியினருக்கு ஒரே மகள். நஞ்சப்பனூர் மலசர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவியும் இவர் தான். 2018ம் ஆண்டு நீட் தேர்வில் கலந்து கொண்டார். ஆனால் வெறும் 6 மதிப்பெண்களில் மருத்துவராகும் கனவு கலைந்து போனது. நீட்டை மட்டுமே நம்பி இல்லாமல், அம்மாணவி கோவையில் ஒரு கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பை மேற்கொள்ள முடிவு செய்தார். ஆனால் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெற சாதி சான்றிதழ் அவருக்கு தேவைப்பட்டது. பல்வேறு நடைமுறை சிக்கல்களை முன்னிறுத்தி அவருக்கு சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது. இதனால் அவர் கல்லூரியில் இருந்து வெறும் 10 நாட்களில் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
”நவம்பர் மாதத்தில் நீட் பயிற்சியை பெற சரவணம்பட்டியில் உள்ள தனியார் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்தேன். ஆனால் கொரோனா இரண்டாம் தொற்று காரணமாக கோச்சிங் வகுப்புகள் தடையானது. மற்ற மாணவர்களைப் போன்று ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ளவும் வாய்ப்பில்லை. எங்கள் கிராமத்திற்கு பெயர் இல்லை, சாலை வசதிகள் இல்லை, மின்சாரமும் இல்லை. அதே போன்று நெட்வொர்க்கும் இல்லை. எனவே இருக்கும் நோட்ஸ்களை வைத்து தேர்வுக்கு தயாரானேன். இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றேன். 202 கட்-ஆஃப் மார்க்குகளை பெற்றுள்ளேன். நிச்சயமாக அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ஏதேனும் ஒன்றில் சேர்ந்துவிடுவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சங்கவி.
குடிசை வீட்டில் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார் சங்கவி. கடந்த ஆண்டு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சங்கவியின் அப்பா முனியப்பன் மரணம் அடைந்தார். தன்னுடைய மகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பது முனியப்பனின் கனவாக இருந்தது.
”ஐந்து முறை சாதி சான்றிதழுக்காக விண்ணப்பித்தார் சங்கவி. ஆனால் அவருக்கு சாதி சான்று வழங்கப்படவில்லை. நீட் தேர்விற்காக அவர் உழைத்தார் என்பதற்கு பதிலாக சாதி சான்றிதழ் பெறவே அவர் அதிகம் போராடினார். மற்ற மாணவர்களுக்கு கிடைத்த சலுகைகளும் அவருக்கு கிடைக்கவில்லை. என்னுடைய நண்பர்கள் மற்றும் சில அமைப்புகள் மூலமாக நிதி திரட்டி சங்கவிக்கு புதிய வீடு கட்டித் தர முடிவு செய்தோம். கூடவே நீட் பயிற்சி வகுப்பிலும் சேர்த்தோம். கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக அதுவும் பாதிக்கப்பட்டது. பிறகு தேர்வுக்கு முன்பு சில வாரங்கள் அவர் பயிற்சி வகுப்புக்கு சென்று தற்போது வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மேலும் சில மாதங்கள் முறையான பயிற்சி கிடைத்திருந்தால் அவர் இன்னும் அதிக மதிப்பெண்களை பெற்றிருப்பார் என்று கூறுகிறார்” சங்கவியின் கல்விக்கு பொறுப்பேற்றிருக்கும் சிவா.
கோவை மாவட்டம் மதுக்கரை தாலுக்காவில் அமைந்துள்ளது ரொட்டிக்கவுண்டனூர் என்ற பகுதி. இந்த பகுதியில் பண்ணைத் தொழிலாளர்களாக பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் மலசர் பழங்குடியினர். 49 குடியிருப்புகளை கொண்ட இந்த பகுதிக்கு பெயர் கூட ஏதும் இல்லாமல் இருந்தது. முனியப்பன் கோவில் தோட்டம் என்றே அழைக்கப்பட்ட இப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வரும் தபால்களும், கடிதங்களும் கூட ரொட்டிகவுண்டனூர் தபால்நிலையத்தில் நின்றுவிடும். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கே சென்று தான் தங்களுக்கான தபால்களை பெற முடியும்.
மேலும் இங்கு வசிக்கும் பலரும் மேற்படிப்பினை மேற்கொள்ளவதில்லை. 6ம் வகுப்பு, 7ம் வகுப்புடன் நின்றுவிடுகின்றனர். மேற்படிப்பு மேற்கொள்ள சாதி சான்றிதழ்கள் அவசியம். ”என்னுடைய பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் சாதி சான்றிதழ் வைத்திருந்தால் தான் என்னால் சாதி சான்றிதழ் பெற முடியும் என்ற நிலை உருவானது. நாங்கள் மலசர் பழங்குடியினர் என்பதை நிரூபிக்க எந்த வகையான சான்றுகளும் இல்லை என்பதால் என்னுடைய விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன” என்றார் சங்கவி.
சாதி சான்றிதழ் விவகாரம் பெரிதான பிறகு, அரசு இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. தெரு விளக்குகள், சாலை வசதிகள், மின்சார வசதிகள் என ஒவ்வொன்றாக இந்த கிராமப்புறத்திற்கு, சங்கவியின் பிரச்சனைக்கான முடிவை தேடும் போராட்டத்தின் விளைவாக கிடைத்து வருகிறது. மழை பெய்யும் காலங்களில் தன்னுடைய புத்தகங்கள் அனைத்தையும் ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைத்து படித்து வந்துள்ளார் சங்கவி. கடந்த ஆண்டு தந்தையின் மரணம், தொடர்ந்து சங்கவியின் தாயாருக்கு கண் பார்வை திறன் பறி போன சூழல் என தனிப்பட்ட பிரச்சனைகளையும் சமாளித்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது நஞ்சப்பனூர் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடுநிலை வகுப்புகளில் படித்து வருகின்றனர். நான்கு மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். வருங்காலத்தில் இந்த கிராமத்தில் இருந்து படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சங்கவி.
தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி 05ம் தேதி அன்று சங்கவியை நேரில் சந்தித்து வாழ்த்துகள் கூறியதோடு மடிக்கணினியையும் வழங்கியுள்ளார். மாணவி மற்றும் பழங்குடி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அவர் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.