யோ-யோ (YoYo) என்ற ஆப் மூலமாக தன்னிடம் பழகி, அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் விருதுநகர் கூமப்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் சமூக வலைதளங்களில் போலியான ப்ரொபைல் உருவாக்கி பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரமசிவம் யோ-யோ (YoYo) ஆன்லைன் ஆப் மூலம் பல பெண்களிடம் பழகியது தெரியவந்தது. அழகான தோற்றம் கொண்ட ஆண்களை, தான் என்பது போல் சமூக வலைதளங்களில் ப்ரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைதளம், முன் பின் தெரியாத நபர்களிடம் பழகி, அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பி பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“