Advertisment

சிறுமியை சீரழித்து கொன்றவன் விடுதலை... காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

கொடுங்குற்றவாளியான தஷ்வந்த் விடுதலை செய்யப்படுவதற்கு காவல்துறையினரின் அலட்சியம் தான் காரணமாகும்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramadoss,

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்பது குறித்து காவல்துறை தலைவர் (ஐ.ஜி) நிலையிலான அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும். தவறு செய்த காவல் அதிகாரிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பினாமிகளின் ஆட்சியில் கிரிமினல்களுக்குத் தான் வாழ்வு போலிருக்கிறது. பால் மனம் மாறாத குழந்தையை சீரழித்து படுகொலை செய்தவன் ராஜ உபச்சாரங்களுடன் குண்டர் சட்டத்திலிருந்து நிரந்தரமாகவும், வழக்குகளிலிருந்து பிணையிலும் விடுதலையாகிருப்பதைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. குற்றவாளியை தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

Advertisment

சென்னை மாங்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரின் 6 வயது மகள் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டாள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பின்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன் கடந்த சில நாட்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டான். அதுமட்டுமின்றி, அவன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கிறான். இந்த இரு விடுதலைகளும் எதேச்சையாக நடக்கவில்லை.

கொடுங்குற்றவாளியான தஷ்வந்த் விடுதலை செய்யப்படுவதற்கு காவல்துறையினரின் அலட்சியம் தான் காரணமாகும். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஷ்வந்த் மீது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை தவறிவிட்டதால் அதைக் காரணம் காட்டி தஷ்வந்துக்கு பிணை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும், குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை குறித்த ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளை காட்டி குண்டர் சட்டத்திலிருந்தும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆறு வயது சிறுமி சீரழிக்கப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் உள்ளன. சிறுமியை தஷ்வந்த் அவரது வீட்டிக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் காணொலியில் பதிவாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் தஷ்வந்த் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறை அதிகாரிகள் தவறியதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

அதேபோல், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் வகையில் அச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் தஷ்வந்தால் குண்டர் சட்ட கைது நடவடிக்கைகளில் இருந்து விடுதலையாக முடிகிறது என்றால் சட்டத்தின் ஓட்டைகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இதை காவல்துறையின் அலட்சியம் என்று கூறுவதை விட, குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்காக திட்டமிட்டு விட்டுக்கொடுக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக 13 அம்சத் திட்டம் ஒன்றை 01.01.2013 அன்று அறிவித்தார். அதன்படி, பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், சரக காவல்துறை துணைத் தலைவரும் வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து வழக்கு முடியும் வரை மாதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்படி காவல்துறை உயரதிகாரிகள் மாதம் தோறும் ஆய்வு செய்திருந்தால் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும். குற்றவாளியும் பிணையில் வெளிவந்திருக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மட்டுமின்றி உயரதிகாரிகளும் குற்றவாளி விடுதலையாக காரணமாகவோ, உடந்தையாகவோ இருந்துள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்பது குறித்து காவல்துறை தலைவர் (ஐ.ஜி) நிலையிலான அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும். தவறு செய்த காவல் அதிகாரிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் பிணையில் வெளிவந்த தஷ்வந்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இது போன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பது போன்ற காரணங்களுக்காக குற்றவாளிக்கு பிணை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Madras High Court Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment