சமூக ஆர்வலர் இரோம் சர்மிளாவுக்கும் அவரது காதலர் தேஸ்மண்ட் குட்டின்ஹோவுக்கும் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றது.
மணிப்பூரை சேர்ந்த இரோம் சர்மிளா, சர்ச்சைக்குரிய அஃப்ஸ்பா எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அதன்பின், தேர்தலில் போட்டியிட்டு படுதோலி அடைந்தபிறகு, தன் காதலரான அயர்லாந்த் நாட்டை சேர்ந்த தேஸ்மண்ட் குட்டின்ஹோவை திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவதாக தெரிவித்த இரோம் சர்மிளா, தன் காதலருடன் கொடைக்கானலில் குடியேறினார்.
இந்நிலையில், இரோம் சர்மிளா தன் காதலர் தேஸ்மண்ட் குட்டின்ஹோவுடன் திருமணம் செய்துகொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார்.
”கொடைக்கானலில் திருமணம் செய்து அவரை இங்கேயே நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டால், கொடைக்கானலின் அமைதி கெடும்”, எனக்கூறி அவரது திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என, பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இரோம் சர்மிளாவின் திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மகேந்திரன் தாக்கல் செய்த மனுவை சார்பதிவாளர் சமீபத்தில் நிராகரித்தார்.
இந்நிலையில், இரோம் சர்மிளாவுக்கும் அவரது காதலர் தேஸ்மண்ட் குட்டின்ஹோவுக்கும் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு, இரோம் சர்மிளா ஏற்கனவே கேட்டுக்கொண்டதன்படி, ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மணப்பெண் தோழியாக இருந்தார்.
சமூக போராட்டங்கள் மட்டுமல்லாமல், தன்னுடைய திருமணத்தையும் போராடி வென்றிருக்கிறார் இரோம் சர்மிளா. அவருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.