Advertisment

மணிப்பூர் கொடூர சம்பவம்: அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைவு; தமிழக தலைவர்கள் கண்டனம்

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur issue, 2 women naked and sexual assaulted, Manipur 2 women raped, Tamil Nadu leaders condemns to manipur issue, Stalin, OPS, Kamal Haasan, Thiruma, மணிப்பூர் கொடூர சம்பவம், அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்தது, தமிழக தலைவர்கள் கண்டனம், ஸ்டாலின், ஓபிஎஸ், கமல்ஹாசன், திருமாவளவன், Manipur, Stalin condemns, OPS condemns, Kamal Haasan condemns, Thiruma condemns

மணிப்பூர் கொடூர சம்பவம்: அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்தது; தமிழக தலைவர்கள் கண்டனம்

மணிப்பூரில் நடந்துவரும் வன்முறையில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மெய்தே இன மக்களுக்கும் குக்கி இன பழங்குடி மக்களுக்கும் இடையே வன்முறை நடந்து வருகிறது. இதில் தேவாலயங்கள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தாலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் வன்முறையாளர்கள் குக்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வண்புணர்வு செய்த கொடூர சம்பவத்தின் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை, தௌபல் மாவட்டத்தில் மே 4-ம் தேதி இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.

மணிப்பூரில் வன்முறையாளர்கள் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துக்கு தமிழக தலைவர்கள் மு.க. ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளிட்ட தலவைர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரமான வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வெறுப்பும், வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்கி விடும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரமான வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அமைதியை திரும்ப கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். வெறுப்பும், வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்கி விடும். வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து மரியாதையான சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நடந்த இந்த கொடூர சம்பவத்துக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மதத்தின் பெயரால் அரங்கேறியுள்ள மணிப்பூர் பேரவலம் இந்திய தேசத்திற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் பாஜகவைத் தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்பதற்கு பற்றி எரியும் மணிப்பூரே சாட்சியமளிக்கிறது. பழங்குடி சமூகப் பெண்மணிகளை நிர்வாணப்படுத்தி பொதுவெளியில் நடத்தி இழிவுப்படுத்தியதோடு கூட்டு வல்லுறவு செய்த அந்தக் கொடிய மனித விலங்குகளைச் சிறைப்படுத வேண்டும். விரைந்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும்.

இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ள இந்தக் கொடிய அநாகரிகத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும். உடனடியாக மணிப்பூர் அரசைக் கலைத்து அம்மாநில முதல்வரையும் கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மணிப்பூரில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லபப்ட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரான இளம் பெண் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “எங்கள் கிராமத்தை தாக்கும் கும்பலுடன் போலீசார் இருந்தனர். வீட்டுக்கு அருகிலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டுபோய், கிராமத்திலிருந்து சிறிது தூரத்திற்கு அழைத்துச் சென்று, அந்த கும்பலுடன் எங்களை சாலையில் விட்டுச் சென்றது போலீஸ். நாங்கள் போலீசாரால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம்.” என்று கூறினார்.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்ட பக்கத்தில், “மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்துள்ளது; அங்கே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: “மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாத காலமாக கலவரம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ஒரு கும்பல் இரு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது. இரு பெண்களும் மர்மக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மே மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் 2½ மாதங்களுக்குப் பிறகு வெளி உலகிற்கு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனைப் பெற்றுத் தரவும், மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kamal Haasan Stalin Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment