நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். ஜாமீன் மனுவில் காவல் நிலையத்தின் பெயரை மாற்றிக் குறிப்பிட்டதால் நீதிபதி கண்டித்துள்ளார்.
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையானது. மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இயகுனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் என திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் தான் தவறாக எதுவும் பேசவில்லை. மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். முன் ஜாமீன் கோரிய மனுவில், ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்று குறிப்பிடுவதற்கு பதில் நுங்கம்பாக்கம் என குறிப்பிட்டதால் மனு வாபஸ் பெறப்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் தனது முன் ஜாமீன் மனுவில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்தின் பெயரை ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று குறிப்பிட்டதால், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல என்று கண்டித்தார்.
இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். மேலும், முன் ஜாமீன் மனுவில் சரியாக காவல் நிலையம் குறிப்பிடப்பட்டு மீனும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“