ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் : கிராம மக்கள் நூதனம்

டாஸ்மாக் கடைகளால் அந்த ஊரில் உள்ள ஆண்களுக்கு யாரும் பெண் தர முன் வருவதில்லை.

மதுக்கடையை மூடக்கோரி ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து நூதன போராட்டம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடந்த இந்த போராட்டம் குறித்த விபரம் வருமாறு:

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள திப்பணம்பட்டியில் உள்ள மதுக்கடையை மூடக் கோரி கிராம மக்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடை முன்பு டெண்ட் கொட்டகை போட்டு போராடி வரும் மக்கள், தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு பெண் கிடைக்காது என்பதை உணர்த்தும் விதமாக ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கும் நூதன போராட்டத்தை நேற்று நடத்தினார்கள்.

இது குறித்து போராட்ட குழுவைச் சேர்ந்த ஜான் ஜெயபால் என்பவரிடம் பேசிய போது, ‘டாஸ்மாக் கடைகளால் அந்த ஊரில் உள்ள ஆண்களுக்கு யாரும் பெண் தர முன் வருவதில்லை. இதை எடுத்துச் சொல்லும் விதமாக நாங்கள் இந்த போராட்டத்தை திப்பணம்பட்டி மதுபான கடை முன்பாக நடத்தி வருகிறோம். கடையை மூடும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும்’ என்றார்.

×Close
×Close