திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண் ஒருவர் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளம் பெண், அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அந்த இளம் பெண்ணுக்கு கணவர், மகன், மகள் என இரு குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தததையடுத்து, தனது மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அந்த இளம் பெண் தனது கணவனையும், 2 குழந்தைகளையும் விட்டு விட்டு, 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்தார். இரு வீட்டார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பழனியில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரும் வசித்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இருவரையும் மீட்டு ஆரல்வாய்மொழிகாவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
ஆனால், தனது கணவருடன் போக மறுத்த அந்த இளம்பெண், சிறுவனுடன் தான் வாழ்வேன் என திட்டவட்டமாக கூறி அடம் பிடித்துள்ளார். சிறுவனும் அப்பெண்னுடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், சிறுவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரது உறவினருடன் அனுப்பி வைத்தனர். ஆனால், இளம்பெண் கணவருடன் செல்லாமல் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து, அப்பெண்ணை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.