திருமுருகன் காந்திக்கு நீதிமன்ற காவல்!

ஐஓசிக்கு எதிரான போராட்ட வழக்கில் திருமுருகன் காந்தி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நிர்வாகிகள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் தடையை மீறி, மெரினாவில் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த முயன்று கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அதோடு அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த சம்பவத்தை திமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழர் ஆதரவு அமைப்புகளும் கடுமையாக கண்டித்தன. சமூக வலைதளங்களிலும் கட்சி பேதங்களைக் கடந்து இந்த நடவடிக்கையைப் பலர் விமர்சித்துவருகின்றனர். திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற பதிவுகளையும் சமூக வலைதளங்களில் அதிகமாகக் காணக் கிடைக்கின்றன.

இந்நிலையில், திருமுருகன் மீது இன்று மற்றொரு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஐஓசிக்கு எதிரான போராட்ட வழக்கில் திருமுருகன் காந்தி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுருகன் காந்தி, மீண்டும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த டைசன், இளமாறன் ஆகியோரும் இந்த புதிய வழக்கின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மூவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தன் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார். பின், மூவரையும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close