கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்ற முனைவதன் மூலம், காவிரி டெல்டா பகுதிகளை முள்ளிவாய்க்காலாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டினார்.
கடந்த மே மாதம் 21-ஆம் தேதி, முள்ளிவாய்க்கால் "நினைவேந்தல்" நிகழ்ச்சி நடத்த முயன்ற மே 17 இயக்க ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பின், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, “கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு போராடியதுபோல் போராட வேண்டும். கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவதன் மூலம், காவிரி டெல்டா பகுதிகளை முள்ளிவாய்க்காலாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், இந்த முள்ளிவாய்க்கால் மத்திய அரசையும், தமிழக அரசையும் வீழ்த்தும் முள்ளிவாய்க்காலாக இருக்கும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாப்பது, ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதுகாப்பதற்கு சமம். அதனால், பெட்ரோலிய முதலீட்டு மண்டல அறிவிப்புக்கு எதிராக தமிழகமே திரண்டு போராட வேண்டும். இல்லையென்றால், அதனை அரசு அழித்துவிடும். அதற்குள் இந்த அரசை வீழ்த்துகின்ற பொறுப்பை இளைஞர்கள், விவசாயிகள் கையில் எடுக்க வேண்டும்.”, என கூறினார்.