மயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வருமாறு..
நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா சோழசக்கரநல்லுhர், சேந்தங்குடி அபிராமி நகரைச்சேர்ந்த ராகப்பிரியாவின் கணவர் விஜயராஜாவிற்கும், ராஜ்மான்சிங் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ராகப்பிரியா மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ராஜ்மான்சிங் மீது புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மீண்டும் 2.7.17 அன்று மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு காலை 7.30 மணிக்கு சென்று புகார்மனுவை அளித்துள்ளார்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் இரவு வரை காத்திருக்க வைத்திருக்கிறார். 13 மணி நேரமாக காத்திருந்த ராகப்பிரியாவும் அவரது கணவரும் “நாங்கள் கொடுத்த புகார் மனுவுக்கு ரசீது கொடுங்கள்” என்று கேட்டதற்கு, ராகப்பிரியாவையும், அவரது கணவரையும் மிகவும் ஆபாசமாகவும், சாதியைச் சொல்லி திட்டியும் அடித்தும் துன்புறுத்தி, அவர்களிடமிருந்த செல்போன்களை பறித்துக்கொண்டு துரத்தி அடித்துள்ளனர். “இதை வெளியில் சொன்னால் உங்கள் இருவர் மீதும் கஞ்சா கேஸ் போடுவேன்” என்று ஆய்வாளர் அழகேசனும், காவல்துறையினரும் மிரட்டியுள்ளனர்.
காவல்துறையினரின் தாக்குதலில் படுகாயமுற்ற ராகப்பிரியாவும் அவரது கணவரும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது, காவல்துறை ஆய்வாளர் அழகேசன் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் இவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடாது என மிரட்டி சிகிச்சை பெறவிடாமல் தடுத்துள்ளார். மயிலாடுதுறை காவல்துறையினரின் இந்த அத்துமீறிய வன்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ராகப்பிரியாவையும் அவரது கணவரையும் தாக்கிய ஆய்வாளர் அழகேசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், திருமதி திருமலை ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ராகப்பிரியா மற்றும் அவர் கணவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.