தமிழகத்தில் நாளை முதல் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒரு வருடம் விலக்களிக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றினால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஒரு வருடம் மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் அவசர சட்ட முன்வரைவை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது. அச்சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் உடனடியாக கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் செவ்வாய் கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதில், “தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனவும், செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.”, எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும், தமிழ் மொழிக்கல்வியில் படித்த மாணவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நன்றாக மதிப்பெண்கள் பெற்று தேவையான கட்-ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர், நீட் தேர்வில் தேவையான மதிப்பெண்களை எடுக்க முடியாததால் அவர்கள் இந்த உத்தரவால் அதிருப்தியடைந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற துரிதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மாநில ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கான நீட் தேர்வு கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல் புதன் கிழமை வெளியிடப்பட உள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்காக ஜூன் 27 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த படிப்புகளுக்கு 50,558 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் 3,536 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. 100 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445 இடங்கள் உள்ளன. மீதமுள்ள இடங்கள் தமிழக அரசுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஒப்பளிக்கும் இடங்களாகும். முதல்கட்டமாக, வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. வரும் 25-ஆம் தேதி முதல் வழக்கமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும். செப்டம்பர் 10-ஆம் தேதி வரை பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தரவரிசைப்பட்டியல் கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். கலந்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கத்தில் நடைபெறும். கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ தெரிவித்தார். அதன் அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

×Close
×Close