Advertisment

சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும்: வைகோ

பா.ஜ.க. அரசு மாநிலங்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவதற்கு ஜி.எஸ்.டி. ஒரு கருவியாகி இருக்கிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaiko, MDMK

மானிய விலை சமையல் எரிவாயு உருளை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை திரும்பப்பெற வேண்டும் மதிமுக பொதுச்செலாளர் வைகோ வலியுறத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை என்பதைச் செயல்படுத்த பொருட்கள் மற்றும் சேவை வரியை ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்கின்றது.

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தால் விலையேற்றம் மக்களைப் பாதிக்காது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மானிய விலை சமையல் எரிவாயு உருளைக்கு 5 விழுக்காடு, ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால், உருளையின் விலை ரூ.32 அதிகரித்து இருக்கிறது. ரூ.560 விற்பனை செய்யப்பட்டு வந்த மானிய உருளையின் விலை ரூ.592 உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு உருளையின் விலையேற்றம் மக்கள் மீது ஜி.எஸ்.டி ஏற்றி உள்ள சுமைக்கு ஒரு உதாரணமாகும்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் மாநில அரசுகள் முன்மொழிந்த பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. மாநிலங்களின் உரிமைகளை நசுக்கும் வகையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மத்திய அரசின் கையே ஓங்கி இருக்கின்றது.

மாநில அரசுகள் வரிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் ஒப்புதல் பெறவேண்டும். மத்திய அரசின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலில், மாநிலங்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படும் நிலைமைதான் இருக்கிறது. ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி முறைக்கும் எதிராக, மாநிலங்களை நகராட்சிகளைவிட மோசமாக நடத்தும் வகையில்தான் ஜி.எஸ்.டி. நடைமுறைகள் இருக்கின்றன.

மாநிலங்களின் பொருளாதார இறைமை நொறுக்கப்பட்டு இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரம் பறிபோனதுடன், வரி வருவாயும் பெருமளவு குறையும் நிலை ஏற்படும். இதனால் மாநிலங்கள் தமது விருப்பப்படி செலவினங்கள் குறித்தும சுதந்திரமாக செயல்பட முடியாது.

ஏனெனில் ஏற்கனவே நிதி ஒழுங்கு மற்றும் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால், மாநில அரசுகள் வரம்புக்கு உட்பட்டே செலவினங்களில் ஈடுபட முடியும். மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வருவாய் இழப்புக்கு ஆளாகும் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். மாநில சுயாட்சி தேவை எனும் குரல்கள் பலமாக ஒலிக்கின்றபோது, பா.ஜ.க. அரசு மாநிலங்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவதற்கு ஜி.எஸ்.டி. ஒரு கருவியாகி இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநில அரசுகளுடன் விரிவான கலந்தாய்வு செய்யவும் மத்திய அரசு தயாராக இல்லை என்பது கண்டனத்துக்கு உரியது.

கோடிக்கணக்கான மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு உருளைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vaiko Gst Gas Cylinder Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment