ஐநா.வில் வைகோ மீதான தாக்குதல் முயற்சியை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என மதிமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனிவா சென்று திரும்பிய நிலையில் இன்று (அக்டோபர் 2) அந்தக் கட்சியின் தலைமையகமான சென்னை தாயகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1.திராவிட இயக்கத்தின் 101 ஆவது ஆண்டு துவக்க நாளான நவம்பர் 20, 2017 இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது என்றும், இம்மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் மாநில கட்சிகளின் தலைவர்களை அழைப்பது என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கு இம்மாநாட்டின் மூலம் செயல்திட்டங்களை வகுப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2.ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டும், தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடூரமான சிங்கள இனவாத அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்க தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றி பெரும் வரலாற்றுக் கடமையை மேற்கொண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோவுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
3. ஐ.நா. மன்றத்திலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் வகையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை தாக்குவதற்கு கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. 4.இந்திய நாட்டின் குடிமகனும், 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவருமான தமிழ் தேசிய இனத்தின் தலைவர் வைகோவை தாக்க முயன்ற சிங்கள அரசுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்காதது வருத்தத்திற்கு உரியது ஆகும். இனியாவது மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
5.சிங்கள அரசின் இச்செயலைக் கண்டித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.