திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தது அருகிலிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கருணாநிதியை சுமார் இரண்டரை வருடங்கள் கழித்து வைகோ சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் உடல் நலக்குறைவுடன் உள்ளார். மருத்துவர்களின் அறிவுரைபடி அவரை பலரும் சந்திப்பதை தவிர்க்குமாறு ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய் கிழமை இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க இரவு சுமார் 8.15 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார் அவருடன் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோரும் உடன் சென்றனர்.
வைகோவை வாசல் வரை வந்து மு.க.ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். முதலாவதாக, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அறைக்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது உடனிருந்தவர்கள் “இவர் யாரென்று தெரிகிறதா”, என கேட்டார். அதற்கு, தயாளு அம்மாள் ’வைகோ’ என அடையாளம் கண்டுகொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கருணாநிதியின் அறைக்கு வைகோ அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு திமுக மகளிர் அணி தலைவையும், எம்,பி.யுமான கனிமொழி உடன் இருந்தார். வைகோ தன் கையில் சால்வை வைத்திருந்தார். கருணாநிதியை சந்தித்ததும் வைகோ கண்ணீர் துளிகளை சிந்தியிருக்கிறார். அதைப்பார்த்து கருணாநிதியும் கண்ணீர் விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, முரசொலி பவள விழாவில் வைகோ கலந்துகொள்வார் என துரைமுருகன் கருணாநிதியிடம் கூறியிருக்கிறார். அதற்கு கருணாநிதி கண்ணீருடனே சிரித்திருக்கிறார். கருணாநிதியிடம், “2 மாதங்களாக நீங்கள் என் கனவில் வருகிறீர்கள்”, என வைகோ கூறினார். இதைக்கேட்டு கருணாநிதி நெகிழ்ந்து போனார். இதையடுத்து, ”சென்று வருகிறேன்”, என வைகோ கூறியதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கருணாநிதி நெகிழ்ந்திருக்கிறார். அதனால், மேலும் 10 நிமிடங்கள் அங்கேயே வைகோ அமர்ந்திருக்கிறார். அதன்பின், பிரிதொரு நாள் வருகிறேன் எனக்கூறிவிட்டு அங்கிருந்து வைகோ வெளியேறியிருக்கிறார்.
இதையடுத்து, வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அரசியலில் என்னை வார்த்தவர் கருணாநிதி. அந்த நன்றியை நான் மறக்கவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதை அறிந்து மனவேதனை அடைந்தேன். திருப்பூர் துரைசாமியை அவர் அடையாளம் கண்டுகொண்டார்.
அவரைப் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. இரண்டு மாதங்களாக கருணாநிதி என் கனவில் வருகிறார். ஆனால், தொண்டையில் குழாய் சொருகியிருப்பதால் அவரால் பேசமுடியவில்லை.
நான் போய் வருகிறேன் என்றதும் அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது.
அவர் முழுமையான உடல் நலம் பெறுவார். காந்த குரலில் பேசுவார். நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். நான் முரசொலி விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதனை கருணாநிதியிடமும் அவர் கூறினார். அவரது அழைப்பை ஏற்று நான் விழாவில் பங்கேற்பேன்.”, என தெரிவித்தார்.
கருணாநிதி - வைகோ சந்திப்பு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.