/tamil-ie/media/media_files/uploads/2017/07/vaiko-759.jpg)
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட செய்தி அறிக்கையில், கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அங்கு ஏற்கனவே எரிவாயு எடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் ஆய்வை அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையிலும், கடந்த 2-ஆம் தேதி காவல் துறையினர் பாதுகாப்புடன் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆய்வுப்பணிகளைத் தொடங்கியபோது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவக் துறையினர் கைது செய்ததாக அறிக்கையில் குறிப்பிட்டார்.
இப்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பதித்த குழாய் உடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால், தங்கள் பகுதியில் விவசாயம் அழிந்து நாசமாகும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியது கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்தார்.
தமிழக அரசின் மெத்தனப் போக்குதான் மத்திய அரசு தமிழ்நாட்டைத் துச்சமாக நினைப்பதற்கு அடிப்படைக் காரணம் என அறிக்கையில் குறிப்பிட்ட வைகோ, எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ அல்லது ஓ.என்.ஜி.சி. மூலம் மறைமுகமாகவோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்களின் போராட்டங்களை ஒடுக்கினால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.