"காவல் துறையின் அநீதியான அடக்குமுறைகளால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது”: வைகோ

"அடக்குமுறைச் சட்டங்கள், காவல்துறையின் அநீதியான அடக்குமுறைகள், சிறைச்சாலைகளில் அடைத்தல் போன்றவற்றால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது"

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை விடுவிக்காமல், அவர்கள் மீது மேலும் ஒரு வழக்கை காவல் துறை பதிவு செய்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட செய்தி அறிக்கையில், பல்வேறு எரிவாயு திட்டங்களால் காவிரி படுகையின் வளங்களை கொள்ளையடிக்க மத்திய அரசு முனவதாகவும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைபோகும் விபரீதம் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பொருத்தியுள்ள எண்ணெய் குழாய்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அறவழியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறை வன்முறையை ஏவியுள்ளதாக தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது பொய் வழக்கு பதிந்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் காவல் துறை அடைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஜூலை 2-ஆம் தேதி தஞ்சையில் உலகத்தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு அரசியல் இயக்கங்களும், விவசாய சங்கங்களும் ஆலோசனை மேற்கொண்டு, “ஜூலை 9-ஆம் தேதிக்குள் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தைவிட்டு வெளியேற வேண்டும், காவல்துறையினர் திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கைளை நிறைவேற்றாவிடில், அறப்போராட்டத்தினர் சார்பாக ஜூலை 10-ஆம் தேதி கதிராமங்கலத்தை நோக்கி முற்றுகையிடும் அறப்போர் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டதாக வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனால், தங்கள் கோரிக்கைளை நிறைவேற்றாமல், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை, அவர்கள் மீது மேலும் ஒரு பொய் வழக்கை பதிவு செய்திருப்பதாக வைகோ கடுமையாக குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏஜெண்ட் போன்று தமிழக அரசு செயல்படுவதாகவும், இந்த நடவடிக்கை பாசிச அடக்குமுறை நடவடிக்கையாகும் எனவும் அவர் சாடினார்.

அடக்குமுறைச் சட்டங்கள், காவல்துறையின் அநீதியான அடக்குமுறைகள், சிறைச்சாலைகளில் அடைத்தல் போன்றவற்றால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது என அறிக்கையில் குறிப்பிட்ட வைகோ, இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அத்தகைய பாசிச போக்கில் ஈடுபட்ட அரசுகளுக்கு வரலாறு பாடம் கற்பித்து இருக்கிறது என தெரிவித்தார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தை ஏவியது தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியின் மன்னிக்க முடியாத குற்றம் என அவர் விமர்சித்தார். இத்தகையப் போக்கு அரசுக்கு எதிராக விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் வைகோ எச்சரித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close