இந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்காக தமிழகத்தை பாழ்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக-வின் தேசிய இளைஞர் அணி தலைவரான பூணம் மகாஜன், என்னை சந்தித்துப் பேசினார். அவரது தந்தை பிரமோத் மகாஜன் எனது உயிர் நண்பர். பூணம் மகாஜன் என்னை பார்த்தபோது, எங்கள் வீட்டில் எனது தந்தை உங்களைப் பற்றி சொல்லாத நாள் கிடையாது என்றார்.
அதற்கு, அடல் பிஹாரி வாஜ்பாய் உங்கள் தந்தையை ஒரு செல்லப்பிள்ளையைப் போல நேசித்தார். பல சமயங்களில் வாஜ்பாய், பிரமோத் மஹாஜன், நான் தனியாக இருந்து பேசியிருக்கிறோம் என்று கூறினேன்
அதேநேரத்தில் பாரதிய ஜனதாக கட்சி தமிழகத்தின் விழுமியங்களை அழித்து, தமிழர் பண்பாடு, நாகரிகங்களை நாசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை எல்லாம் அழித்து மீத்தேன் கேஷ், ஷேல் கேஸ், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மூலமாக இந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்கு தமிழகத்தை பாழ்படுத்த திட்டமிட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இதனை நாங்கள் அங்குலத்திற்கு அங்குலம் நாங்கள் எதிர்ப்போம்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கேடு செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயத்திற்கே கேடு செய்கிறது. பாஜக, திராவிட இயக்கத்தை நாசப்படுத்திவிடலாம் என பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு நாளும் நடக்க வாய்ப்பில்லை.
அதிமுக-விற்குள் நடைபெறும் குழப்பங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதிமுக அரசு ஜனநாயத்தின் குரல்வலையை நெரிக்க முயல்கிறது. குண்டர் சட்டத்தை ஏவுகிறது. திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்கிறது. ஜெயராமனை சிறையில் அடைக்கிறது. மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவுகிறது. இவையெல்லாம் வினையை விதைக்கின்ற வேலை. அடக்கு முறையின் மூலமாக கருத்துகளை நசுக்கிவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மு.க ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.