இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்: வைகோ

ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நன்மை தீமைகளைப் பிரித்து அறிந்து, நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம், மாற்றம் தருகின்ற மாதம்; உள்ளங்களில் உண்மை ஒளி படர்ந்திடும் மாதம்.

இந்தத் திங்களில்தான் இஸ்லாத்திற்கு மகுடங்களைச் சூட்டிய வெற்றிகள் தேடி வந்து கிடைத்தன. இஸ்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அசைக்க முடியாத ஒரு மார்க்கமாக நிறுவிய பத்ருப் போர்க்கள வெற்றி; மக்கா யுத்த களத்தின் வெற்றி, மங்கோலிய டார்ட்டாரியர்களை இஸ்லாமியர்கள் வெற்றி கொண்டது, சிலுவைப் போர்களில் இஸ்லாமியர்களுக்குக் கிடைத்த வெற்றி, ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போர்க்களத்தின் வெற்றி எல்லாமே இந்த ரமலான் மாதத்தில்தான்.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு விதிக்கப்பட்ட புனிதமான ஐம்பெருங் கடமைகளில் நிகரற்ற கடமை, தவிர்க்க இயலாத கடமை ரமலான் நோன்புதான் என்று திருக்குர் ஆன் அழுத்தந் திருத்தமாகச் சொல்லுகின்றது.
புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களிலும் பொழுது புலரும் வேளையில் இருந்து அந்தி சாயும் நேரம் வரை பசி பொறுத்து உணவு உண்ணாமல், தாகத்தைத் தாங்கி தண்ணீர் அருந்தாமல் புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு தவம் இருத்தலை நிறைவு செய்கின்ற வகையில் ரமலான் பெருநாள் அமைகின்றது.

காய்ந்த குடல்கள், காலியான வயிறுகள், பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close