தமிழ் உணர்வாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை, குறிப்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2009 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவின் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு, ஆண்டுதோறும் அமைதி வழியில் நினைவேந்தல் வீர வணக்க நிகழ்ச்சி மெரினா கடற்கரையில், மே 17 இயக்கம் நடத்தி வந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான் அதில் பங்கேற்று இருக்கின்றேன். வழக்கம்போலவே, இந்த ஆண்டு மே 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் அத்தகைய நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றபோது, தமிழகக் காவல்துறை தடுத்தது. அமைதி வழியில் நடத்த முயன்ற தமிழ் ஈழ உணர்வாளர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டனர்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏழு பேரும், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 9 பேரும், காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும், தமிழர் விடியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் தோழர் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்து, அடக்குமுறையை ஏவி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். இதில் தோழர் அருண்குமார் அவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
தடுப்புக் காவல் சட்டம், மிசா சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஜனநாயகத்தை அழிக்கின்ற கொடிய சட்டங்களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்புவோரைக் கைது செய்து சிறையில் அடைத்து அரசுகள் பாசிச வெறியாட்டம் நடத்தி வந்துள்ளன. இந்திய அரசியல் சட்டம் உறுதி அளித்துள்ள பேச்சு உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை நசுக்க இன்றைய தமிழக அரசு காவல்துறையைப் பயன்படுத்துவது அக்கிரமமான விபரீத நடவடிக்கை ஆகும்.
ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தீவில்கூட தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெற்றது. ஆனால் தாய்த் தமிழத்தில் அத்தகைய நினைவேந்தல் நிகழ்ச்சிக்குக்கூட காவல்துறை அனுமதிக்காதது உலகத் தமிழர்களின் பார்வையில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையைத் தமிழகத்திற்கு ஏற்படுத்திவிட்டது.
தமிழ் உணர்வாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை, குறிப்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்து, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.’’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.