Advertisment

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ

நீட் நுழைவுத் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவராகும் கனவை மத்திய அரசு தகர்த்து எறிந்துவிட்டது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaiko

மருத்துவக் கல்விக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் திணித்து சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி சார்பில் ஆகஸ்டு 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்துவதை ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்க்கிறது. மத்திய அரசு தமிழக மக்களின் கொந்தளிக்கும் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு,’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று முனைப்பு காட்டி, நுழைவுத் தேர்வையும் நடத்திவிட்டது.

மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியது. தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவு எங்கே போயிற்று என்றே தெரிவியல்லை என்று மத்திய அமைச்சர் ஒருவர் அதிகார மமதையில் ஆணவத்தோடு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

நீட் நுழைவுத் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவராகும் கனவை மத்திய அரசு தகர்த்து எறிந்துவிட்டது. சமூக நீதிக் கோட்பாட்டுக்கு இந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சகமாக இருட்டில் தள்ளி இருக்கிறது.

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே பண்பாடு எனும் ‘இந்துத்துவா’ கொள்கையை இந்தியா முழுவதும் அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பதற்கு பா.ஜ.க. அரசு செயலாற்றி வருகிறது. நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு, ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கி இருக்கிறது.

கல்வித்துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதின் மூலம், மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரங்களையும், உரிமைகளையும் பா.ஜ.க அரசு தட்டிப் பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரியும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், மருத்துவக் கல்விக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் திணித்து சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி சார்பில் ஆகஸ்டு 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை துறைமுகம் பொறுப்புக் கழகம் எதிரில், மாவட்ட ஆட்சியரகம் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகளும், பொதுமக்களும் நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக அகற்றுவதற்கு அணி திரண்டு ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!! என அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Central Government Vaiko Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment