நவம்பர் 20-ம் தேதி மதிமுக சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: வரும் நவம்பர் 20-ம் தேதி மதிமுக சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது. அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக திராவிட மொழிகளின் மூல மொழியான, உலகத்தின் முதல் மொழியான தமிழை ஆட்சி மொழியாக்குங்கள் என்பது எங்களின் நிலைப்பாடு. எனவே, எந்ததெந்த துறைகளில் எல்லாம் மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது என்கிற பிரச்சனையை முன்வைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் மாநில சுயாட்சி கோரிய தலைவர்களை முக்கியமாக அழைக்கிறோம். அதில் குறிப்பாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பாரூக் அப்துல்லா, அகாலி தளத்தின் தலைவர் பர்காஷ் சிங் பாதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்திருக்கிறோம். இதேபோல மாநில உரிமைகளுக்காக போராடுகின்ற வடகிழக்கு மாநில தலைவர்களையும் அழைக்கவுள்ளோம். முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை அழைத்திருக்கிறோம், அவரும் வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியும் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.இந்த மாநாட்டிற்கு திமுக-வையும் அழைக்க நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
மத்திய அரசு பல்வேறு வகையில் தமிழகத்திற்கு கேடு நினைத்து வருகிறது. ஹைட்ரோகார்பன் கேஸ் திட்டத்தில், கேஸ் எடுத்தே தீருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாங்கள் தீர்பாயத்தில் வழக்கை கொண்டு சென்றோம். ஆனால், இந்த தீர்ப்பாயத்தையே கலைத்துவிட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ், மீத்தேன் போன்ற திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான கோடி பணத்தை திரட்ட திட்டமிட்டுள்ளார்கள்.இது போன்ற திட்டங்களால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்படும் என்ற கவலை மத்திய அரசுக்கு இல்லை.
செப்டம்பர் 21-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரு முடிவு எடுத்துள்ளனர். கோவையில் 1960-ல் தொடங்கப்பட்ட மத்திய அரசின் அச்சகத்தை, மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் அச்சகத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளனர். 132.7 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த மத்திய அரசின் அச்சகமானது, அஞ்சல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு தொடர்பான அச்சு தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த 132.7 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துவிட்டு, வட மாநிலங்களில் உள்ள அச்சகத்தை நவீன மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை நீக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் மதிமுக வலியுறுத்துகிறது என்று கூறினார்.